மருத்துவரின் பணி

மருத்துவரின் பணி


ஒரு மருத்துவருடைய தலையாய பணி(MISSION) நோயுற்ற மனிதரை மறுபடியும் நோயற்ற நிலைக்குக் கொண்டு வருவதுதான்.
அதாவது அவரை பூரண நலமுள்ளவராக மாற்றுவது இது தவிர்த்து அவருடைய கற்பனைகள் புனைவுகள் மூலம் புதிய மருத்துவமுறையைக் கண்டுபிடிப்பதாக மக்களைப் பிரமிக்க வைப்பது அல்ல.
மனிதனுக்குள்ளே என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை அலங்கார வார்த்தைகளால் பிறர்க்குப் புரியாதபடி கூறி துயரர்களை மிரள வைப்பது அல்ல.
மருத்துவம் தொடர்பான புரியாத வார்த்தைகளைக்கூறித் தான் படித்த மேதாவி என்று காட்டிக்கொள்வதல்ல.
துயரர்கள் ஒரு மருத்துவரிடம் தங்கள் துயரங்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்காகவே வருகிறார்கள் அந்த நிவாரணத்தை அளிப்பதே தலையாய கடமை.அந்த தலையான பணியைச்செய்யப்போகும் மருத்துவர் என்னவெல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

1.ஒவ்வொரு நோயிலும் குணப்படுத்தப்படவேண்டியது என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.
2.அதேபோல் ஒவ்வொரு மருந்திலும் குணப்படுத்துவது எது என்பதை அறிந்திருக்கவேண்டும்.
3.இவ்வாறு நோயில் குணப்படுத்தப்படவேண்டியதையும் மற்றும் மருந்தில் குணப்படுத்துவதையும் எப்படிப் பொருத்தவேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
4.தன்னிடம் வந்துள்ள துயரருக்கு உரிய மருந்தைத் தேர்வு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்
5.அந்த மருந்தை எப்படித் தயாரிக்கவேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும்.
6.அந்த மருந்தை எந்த வீரியத்தில் எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதைத்தெரிந்திருக்க வேண்டும்.
7.அந்த மருந்து துயரரிடம் வேலை செய்து என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிய வேண்டும்.
8.அந்த மருந்தின் செயலாற்றும் திறம் முடிந்துவிட்டதா? அப்படியாயின் அடுத்தவேளை மருந்தை எப்போது கொடுக்க வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்.
9.ஒவ்வொரு முறையும் துயரரை முதன்முறையாக ஆய்வுசெய்வதுபோல் ஆய்வு செய்து அவரின் குறிகளின் தன்மையை அறிந்து ஏற்கெனவே கொடுத்த மருந்துதான் மறுபடியும் தேவைப்படுகிறதா? அப்படியாயின் அந்த மருந்தின் வீரியத்தை மாற்றவேண்டுமா? அல்லது அளவை மாற்ற வேண்டுமா? என்பதை எல்லாம் நன்கு அறிந்து தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
10.இவ்வாறு தன்னிடம் வரும் துயரருக்கு உரிய மருந்தை தேவைக்கு ஏற்பக் கொடுத்து படிப்படியாக குணப்படுத்தும்போது, அவரைக் குணப்படுத்தவிடாமல் தடுக்கும் தடைகள் என்ன என்பதை அறிந்திருக்கவேண்டும்.
11.தடைகளை அறிந்து அதை நீக்கத்தெரிந்திருக்க வேண்டும்.
12.இவ்வாறு தடைகளை நீக்கி துயரரை பூரணநலமுள்ளவராக ஆக்கவேண்டும்.அப்போதுதான் அவர் பகுத்தறிவுபூர்வமாக மருத்துவம் செய்வதாக கருதப்படுவார்.

இவ்வாறு ஒரு துயரரை நோயுற்ற நிலையிலிருந்து மீட்டி நோயற்ற நிலைக்கு கொண்டு வருவதோடு மட்டும் ஒரு மருத்துவருடைய பணி முடிந்துவிடுவதில்லை.
அதற்கும் மேலாக ஆரோக்கியமான மனிதர்களிடம் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.அதை எவ்வாறு நீக்குவது என்பதையும் தெரிந்திருக்க வேண்டும்.அப்போது அவர் நோயிலிருந்து துயரரை மீட்டுவது மட்டுமின்றி ஆரோக்கியமான மனிதர்களின் நலத்தைப் பேணுபவராகவும் செயல்படுகிறார்.
இங்கே ஹோமியோபதி மருத்துவர் மருந்து கொடுத்து நோயைக் குணப்படுத்துபவராக மட்டும் இல்லாமல் நோயை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்பதை அறிந்து அவற்றை நீக்க வேண்டும் என்றபோது அவர் ஒரு மருத்துவராக மட்டும் இருந்தால் போதாது.
ஏனெனில் நோய்க்கான காரணிகள் வறுமை,வேலை இல்லாத்திண்டாட்டம், சுகாதாரமற்ற வாழ்வு,சாதிமதக்கொடுமைகள்,சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அறியாமை இவைகள் தாம்.
ஒரு நல்ல ஹோமியோபதி மருத்துவர் என்பவர் டாக்டர் ஹானிமன் அவர்களுடைய கூற்றுப்படி மேற்கூறிய காரணிகளை நீக்கும் பணியில் ஈடுபடவேண்டும். டாக்டர் ஹானிமன் அலோபதி மருத்துவம் பார்த்தபோது அவர்தான் சுகாதாரம் தொடர்பாக முதல் குரலை எழுப்பிய மருத்துவராக இருந்தார்.அவர் மனிதனின் உணவு,வாழும் முறை மற்றும் இருப்பிடம் இவை எல்லாம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி மருத்துவ வரலாற்றில் அவர் காலத்தில் முதலில் எழுதிய மருத்துவராவார்.
இன்று சமூகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.மனித இனம் வறுமையாலும் அறியாமையாலும் படுதுயர் எய்தி நோய்வாய்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் என்ன என்பதை அறிந்து நீக்க முயற்சிக்க வேண்டும்.
அப்போது ஹோமியோ மருத்துவர் மருந்து கொடுப்பவராக மட்டுமில்லாமல் ஒரு சமூகப்போராளியாக மாற வேண்டும் இல்லையேல் மேற்கூறிய காரணிகளை நீக்கமுடியாது.