மகா முத்ரா

மகா முத்ரா !

யோகாசனம் ஏதோ உடற்பயிற்சி என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணமாகும். யோகா என்பது உடலுக்கும், மனதிற்கும் ஒருசேர பலன் கிடைக்க செய்யப்படும் பயிற்சியாகும். யோகா செய்பவர்கள் மது அருந்துதல், புகைப்பிடித்தல், புகையிலைப் போடுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதேபோல் உணவு முறையிலும் சீரான கட்டுப்பாடு இருக்க வேண்டும். யோகாசனம் செய்வதற்கு முன்பு மனதில் அச்சம், பீதி, படபடப்பு, மன இறுக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஆகையால் காலை வேளையில் யோகா செய்வது நல்லது.

சிலர் பத்திரிக்கையில் வரும் விளம்பரங்களைப் பார்த்து யோகா செய்வார்கள். பின்னர் நேரமில்லை என அதனைத் தொடராமல் விட்டுவிடுவார்கள். யோகம் என்பது ஒருகலை. அதனை தெய்வக்கலையாக எண்ணி தினமும் செய்துவந்தால் மனமும் உடலும் சிறந்த ஆரோக்கியம் பெறுவது திண்ணம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகாவில் மகாமுத்ரா ஆசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.

மகா முத்ரா உட்கட்டாசனத்திற்கு மாற்று ஆசனமாகும்.

செய்முறை

முதலில் விரிப்பின் மீது அமர்ந்து கால்களை மண்டியிட்டு பின் வஜ்ராசன நிலைக்குச் செல்ல வேண்டும்.

கைகளை முதுகின் பின்புறம் படத்திலுள்ளபடி உள்ளங்கையை வெளியில் காட்டியபடி வைத்துக்கொள்ள வேண்டும்.

முன்புறமாக குனிந்து தலையை தரையில் தொடும்படி குனிய வேண்டும். அப்போது கால் பகுதிக்கு அருகில் கைகள் இருக்க வேண்டும்.

மூச்சு சாதாரண நிலையில் இருக்கவேண்டும். இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இவ்வாறு செய்ய வேண்டும்.

பயன்கள்

முதுகுத்தண்டு வளைவதால் கீழ்முதுகுத் தண்டுவலி, கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்றவை நீங்கும். உடலானது மூன்று மடிப்புகளாக வளைவதால் உடலின் விரைப்புத்தன்மை குறையும்.

தொடைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் கால்களுக்கு நல்ல பலம் கிடைக்கும். தொப்பையைக் குறைக்க இதுவே சிறந்த ஆசனமாகும்.

நுரையீரலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை பெற்றுக்கொள்ளும் அளவுக்கு சுவாசப் பைகளை பலப்படுத்தும்.

மனச் சஞ்சலம் நீங்கும். அஜீரணக் கோளாறு நீங்கும். கருப்பை பலப்படும்.

கர்ப்பிணிப் பெண்கள் இவ்வாசனத்தை தவிர்ப்பது நல்லது.

தேகப் பயிற்சி

நீரழிவு நோயாளிகளுக்கு... தேகப் பயிற்சி...!!!

நீரிழிவு நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் தேகப்பயிற்சி. வெறும் உணவுக் கட்டுப்பாடு மட்டும் பலனைக் கொடுக்காது. உணவுக் கட்டுப்பாட்டுடன் தேகப் பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தால்தான் உடலில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடல் எடை கூடாது. வலுவான தசைகள் உருவாகும். சீரான இரத்த ஓட்டம் கிடைக்கும். அதனால் இதயம் மற்றும் சிறுநீரகங்கள் சரியாக செயல்படும். இப்படி பல நன்மைகள் அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஏன் தேகப்பயிற்சி?

பொதுவாக உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் எப்படி தேவையோ அந்த அளவுக்கு குளுக்கோஸும் தேவை. இந்த குளுக்கோஸ் இரத்த நாளங்கள் மூலம் திசுக்களுக்கு கிடைக்கிறது. அந்த திசுக்களின் மேல் இன்சுலின் தாங்கிகள் (டிணண்தடூடிண ணூஞுஞிஞுணீtணிணூண்) ஒருவித விகிதாச்சாரத்தில் இருக்கும். திசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அதாவது உடல் பருமன் உள்ளவர்களுக்கு, திசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த இன்சுலின் தாங்கிகளின் விகிதாச்சாரம் குறைந்திருக்கும்.

திசுக்கள் என்ற பூட்டுக்கு குளுக்கோஸ் கிளைகோஜனாக மாறி உள்ளே செல்ல இன்சுலின் சாவிபோல் பயன்படுகிறது. இந்த இன்சுலின் என்ற சாவி இல்லையென்றால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாறி திசுக்களுக்கு செல்லாது. இந்த குளுக்கோஸ் தாங்கி சரிவர வேலை செய்யவில்லை என்றாலும், அல்லது போதிய அளவு இல்லாவிட்டாலும் எவ்வளவு தான் இன்சுலின் சுரந்தாலும் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும்.

தேகப்பயிற்சி செய்யும்போது அதிக சக்தி தேவைப்படுகிறது. அந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? ஏற்கனவே நாம் சொன்னது போல திசுக்களில் சேமித்துவைக்கப்படும் கிளைகோஜன் மற்றும் கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் கிளைக்கோஜனால் மட்டும்தான். இந்த கிளைகோஜன்தான் தானாகவே குளுக்கோஸாக மாறி இரத்தத்தில் கலந்து இரசாயன மாற்றத்தின் மூலம் (ணிதுதூஞீச்tடிணிண) சக்தியைக் கொடுக்கிறது. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு குறைகிறது. ஏன் என்றால் அதுதான் சக்தியாக மாற்றப்பட்டு விடுகிறதே..

நமது உடலில் உள்ள உள் உறுப்புகளான மூளை, இதயம், சிறுநீரகம், நுரையீரல் போன்றவை எப்பொழுதும் செயல்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதாகிறது. இதற்குத் தேவைப்படும் சக்தியை இந்த குளுக்கோஸ் கொடுக்கிறது. இதன் அளவு 70மி.கி. அளவுக்கு குறையும்போது மூளை செயல்பட முடியாமல் மயக்கம் ஏற்பட ஆரம்பிக்கிறது.

தேகப் பயிற்சியால் ஏற்படும் நன்மைகள்

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதால் உடல் வலுப்பெறுகிறது. இன்சுலின் தகுந்த முறையில் வேலை செய்கிறது. நன்மை பயக்கும் ஏஈஃ கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை சீராக இயங்கச் செய்கிறது. இரத்த நாளங்கள் பலப்படுகிறது. பிராண வாயு அதிக அளவு நுரையீரலிலிருந்து எல்லா உடல் உறுப்புகளுக்கும் செல்கிறது. இதயம் சீராக இயங்குகிறது. சீரான உடற்பயிற்சியில் இதயம் சாதாரண ஓய்வு நிலையில் இருப்பதை விட 5-6 மடங்கு அதிகமாக வேலை செய்து பிராண வாயு இருபது மடங்கு அதிகமாகி தேவையற்ற கலோரி சத்து எரிக்கப்படுகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் பெறுகிறது.

சாதாரணமாக ஒரு மணி நேரத்திற்கு 4 கிலோ மீட்டர் நடந்தால் சுமார் 200 கலோரி எரிக்கப்படுகிறது. அதாவது நாம் எடுத்துக் கொள்ளும் 2 இட்லி அளவில் உள்ள கலோரி. சற்றே யோசித்துப் பாருங்கள். ஒரு விருந்து சாப்பாட்டில் சாப்பிடும் உணவிற்கு எத்தனை மணி நேரம் நீங்கள் நடந்தால் நீங்கள் சாப்பிட்ட உணவில் உள்ள கலோரி கரையும் என்பதை.

நடைபயிற்சியின்போது கடைப்பிடிக்க வேண்டியவை

· மூச்சு இரைக்க நடக்கக்கூடாது.

· காலை, மாலை நடந்தால் மிகவும் நல்லது.

· நடக்கும்போது நடையில் மட்டும்தான் கவனம் இருக்க வேண்டும். மனம் அமைதியோடு இருக்க வேண்டும்.

· நடக்கும் பொழுது பாதம் முழுக்க ஒரே சீராக அழுத்தம் கொடுத்து நடக்க வேண்டும். நிதானமாக நடக்க வேண்டும்.

· தினசரி நடப்பது அவசியம்.

· நடக்கும்போது நடையைத் தடுக்காதவாறு தொளதொளப்பான ஆடைகளை அணிய வேண்டும்.

· கால்களில் மென்மையான அதிக இறுக்கம் இல்லாத காலணியை அணியவேண்டும்.

உடற்பயிற்சி

நடைப்பயிற்சி செய்ய இயலாதவர்கள் அதாவது உடல் பருமன், மூட்டுகளில் வலி உள்ளவர்கள் உடற்பயிற்சி செய்து நீரிழிவு நோயின் கடும் தாக்குதலில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு டாக்டரை கலந்து ஆலோசித்து என்ன மாதிரியான உடற்பயிற்சி எவ்வளவு நேரம் செய்யலாம் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு போன்ற எல்லாவற்றையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கடைப் பிடித்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். இந்த கட்டுப் பாடுகளுடன் இருந்தால் நீரிழிவு நோய் இருந்தாலும் வெகு நாட்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் சுகமாக வாழலாம். நிதானமான நடை உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

கண்டங்கத்திரி

கற்ப மூலிகை - கண்டங்கத்திரி !!!

மனிதன் உட்பட உலகின் அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியமாக வாழ இயற்கையால் படைக்கப்பட்டவை தான் செடிகள், கொடிகள், மரங்கள். இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதனுக்கு பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது.

இவற்றில் மனிதனுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவைதான் கற்ப மூலிகைகள்.

கற்பம் என்றால் உடலை நோயின்றி ஆரோக்கியமாக வைப்பது. இதில் மூலிகைகள் பல உள்ளன. ஒவ்வொரு மூலிகைகளுக்கும் அதனதன் தன்மைப்படி தனித்தனி மருத்துவக் குணங்கள் உண்டு. இதில் கண்டங்கத்திரி ஒரு கற்ப மூலிகை. இதனுடைய மருத்துவப் பயன்கள் ஏராளம்.

கண்டங்கத்திரி படர்செடி வகையைச் சார்ந்தது. இது எல்லா இடங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டவை.

இதன் இலை, பூ, காய் பழம், விதை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கார்ப்புச் சுவை கொண்ட இது சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

காச சுவாசங் கதித்தஷய மந்தமனல்
வீசுசுரஞ் சன்னி விளைதோடம்-ஆசுறுங்கால்
இத்தரையு னிற்கா, எரிகாரஞ் சேர்க்கண்டங்
கத்திரியுண் டாமாகிற் காண்
-அகத்தியர் குணவாகடம்

பொருள் - கண்டங்கத்திரிக்கு காசம், சுவாசம், ஷயம், அக்கினி மந்தம், சன்னி, வாதம், தோஷ நோய்கள், தீச்சுரம், வாதநோய், ரத்தசுத்தி போன்றவற்றைத் தடுக்கும் குணமுண்டு.

கண்டங்கத்திரியின் மருத்துவப் பயன்கள் சுவாச நோய்களுக்கு

இன்றைய புறச்சூழ்நிலை மாறுபாட்டால் உண்டான அசுத்தக் காற்றை சுவாசிக்கும்போது அவை உடலில் ஒவ்வாமையை உண்டுபண்ணி நுரையீரலைப் பாதிக்கிறது. மேலும் உடலுக்குத் தேவையான பிராண வாயுவை தடைசெய்கிறது. இதனால் மூச்சுக் குழல் தொண்டைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. சளிபிடித்துக்கொள்ளுதல், மூக்கில் நீர் வடிதல், அதிகளவு தும்மல் மூச்சுத் திணறல் போன்றவை உண்டாகிறது.

சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கண்டங்கத்திரிக்கு உண்டு.

கண்டங்கத்திரியின் தன்மை பற்றி அகத்தியர் கூறும் கருத்து இதோ..

மாறியதோர் மண்டைச்சூலை
கூறியதோர் தொண்டைப்புண்
தீராத நாசிபீடம்

தலையில் நீர் கோர்த்தல், சூலை நீர் எனப்படும் கப நீர், பித்த நீர் இவற்றை சீராக்கி செயல்படுத்தி மாற்றவும், தொண்டையில் நீர்க்கட்டு, தொண்டை அடைப்புகள், மூக்கில் நீர் வடிதல், சளி உண்டாதல் போன்றவற்றிற்கும், மூச்சுத் திணறல், இருமல், ஈழை, இழுப்பு இவற்றிற்கும் சிறந்த நிவாரணம் தரக்கூடியது கண்டங்கத்திரி என அகத்தியர் பெருமான் கூறுகிறார்.

இன்றைய சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் முதல் பெரிய அளவில் வியாபார நோக்கோடு சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கும் மருந்துசெய் நிறுவனங்கள் வரை சித்த, ஆயுர்வேத மருந்துகளில் கண்டங்கத்திரியை உபயோகிக்கின்றனர்.

பொதுவாக முட்கள் நிறைந்த மூலிகைகள் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் குணமுள்ளவை. அந்த வகையில் ஒத்த குணமுடைய மூலிகைகளான கண்டங்கத்திரி, இண்டு, இசங்கு, தூதுவளை சம அளவு எடுத்து அதனுடன் ஆடாதோடை சேர்த்து இடித்து நீரில் கொதிக்கவைத்து காலை, மாலை இருவேளையும் அருந்தி வந்தால் மேற்கண்ட சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளிதில் குணமாகும்

மாற்றுமுறை

கண்டங்கத்திரி இலை, இண்டு இலை, இசங்கு இலை, தூதுவளை இலை, ஆடாதோடை இலை இவற்றை நிழலில் காயவைத்து சம அளவு எடுத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் இருவேளை 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.

கண்டங்கத்திரி கஷாயம்

இண்டு, இசங்கு, கண்டங்கத்திரி, ஆடாதோடை, தூதுவளை, துளசி இலை, வால்மிளகு, சுக்கு, திப்பிலி இவற்றில் தலா 5 கிராம் அளவு எடுத்து இடித்து பொடித்து இரண்டாகப் பிரித்து காலையில் 1 பங்கை 2 கப் நீரில் கொதிக்க வைத்து 1 கப்பாக வற்ற காய்ச்சி வடிகட்டி அருந்தவேண்டும். அவ்வாறே மற்றொரு பங்கை மாலையில் செய்து அருந்தவேண்டும். இது தீராத ஆஸ்துமா, வலிப்பு நோய் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.

கண்டங்கத்திரி காது, மூக்கு, தொண்டை, வயிற்றுப்பகுதி மூதலிய இடங்களில் உள்ள தேவையற்ற சளியைப் போக்குகிறது.

கண்டங்கத்திரிக்கு ரத்தத்தில் சளியையும், ரத்தக் குழாய்களில் உண்டாகும் கொழுப்பு அடைப்புகளையும் நீக்கும் தன்மை உண்டு. அதேபோல் மார்புச் சளியை நீக்கி குரல்வளையில் தேங்கிநிற்கும் சளியை நீக்கி சுவாசத்தை சீராக்கும்.

கண்டங்கத்திரி இலையின் சாற்றை தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் பூசி வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். தலைவலி, சரும பாதிப்பு இவைகளுக்கு மேல்பூச்சாகப் பூசினால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

கண்டங்கத்திரி எல்லா பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. இதனை முறைப்படி பயன்படுத்தி நாமும் நோயின்றி வாழ்வோம்.

வயித்த இழுத்து பிடிக்குதா

வயித்த இழுத்து பிடிக்குதா...?-நாட்டு மருத்துவம் !

மிதமான உணவு.. அளவான ஓய்வு.. இது ரெண்டும்தான் சுகமான வாழ்வு...

உண்டி சுருங்குவது பெண்டிற்கு மட்டுமல்ல.., ஆண்களுக்கும்கூட நல்லதுதான்..

.. கண்டதையும் கண்ட நேரத்தில உள்ளே தள்ளி வயிற்ற நிரப்பினா அது என்ன செய்யும். அரைக்க முடிந்ததைத்தான் அரைக்கும். மற்றவையெல்லாம் குப்பைதான். செரிக்காது.. நெஞ்சு எரியும்.. வயிறு பொருமும்.. மலச்சிக்கல உண்டாக்கும். தூக்கம் வராது..

பசிக்கு உணவு எப்படி அவசியமோ, அதமாதிரி ஆரோக்கியத்திற்கு அளவும் அவசியம், அதுவும் சுகாதாரமான உணவா இருக்கணும்.

இப்போ என்னமோ பட்டணத்துப் பசங்களெல்லாம் ஏதோ பீஸாவாமுல்ல.. அத மல்லுக்கட்டி உள்ள தள்ளுறானுக.. வயிறு என்னத்துக்கு ஆகும்.. எளிதில செரிக்கும் உணவுதான நல்லது...

போகட்டும் இனியாவது இதையெல்லாம் நினைவில வச்சிக்க.. இப்போ நாஞ் சொல்ற மருந்த கேட்டுக்க..

இஞ்சி -1 துண்டு

பூண்டு - 4 பல்

வெற்றிலை - 2

முருங்கை இலை - 1 கைப்பிடி

நல்ல மிளகு - 4

இவைகளை இடிச்சி சாறு எடுத்து தண்ணில கலந்து குடிச்சிக்கிட்டு வா.. இது சாதா வயிற்று வலிக்கு நல்லது... குழந்தைகள் வயித்துவலிக்கும் இத கொடுக்கலாம்.. கெடுதல் கிடையாது.

வைத்தியர் சொன்ன மருந்தைக் கேட்ட ஆரோக்கியசாமி, உற்சாகத்துடன் அவரிடம் இருந்து விடைபெற்றார்.

எது சாப்பிட்டாலும் வாந்தியா

எது சாப்பிட்டாலும் வாந்தியா


பாட்டி வைத்தியம் !!!

ரொம்ப நாளா எது சாப்பிட்டாலும் வாந்தியா வருது பாட்டி.. அது மட்டுமில்லாம எந்த நேரமும் மலம் கழிக்கணும்னே தோணுது.. ஜீரணமே ஆக மாட்டேங்குது.. என்ன பண்றதுன்னே தெரியலை.. சரியா தூக்கமும் வர்றதில்ல.. பசியும் எடுக்கிறதில்ல.. என்ன பண்றதுண்ணே தெரியலை பாட்டி.. இதுக்கு நீதான் ஏதாச்சும் மருந்து சொல்லனும்... என மீனாட்சி தனது பிரச்சனையை பாட்டியிடம் கூறினாள்.

உடனே பாட்டி, உனக்கு 40 வயசு ஆச்சுல்ல.. ஒடம்பு ஏதாவது ஒரு வகையில பாதிப்பு இருக்கத்தானே செய்யும்.

... குடல் கொத்துக் கெட்டா உடல் ஒண்ணுக்கும் ஆகாதுண்ணு சொல்றதுண்டு.. குடல் செரிமான சக்திய இழந்துட்டா எது சாப்பிட்டாலும் இப்பிடித்தான்.. ஒண்ணு வாந்தி வரும், இல்லன்னா வயிற்றுப்போக்கு வரும். எப்போதுமே மந்தமா இருக்கும்.. பசி.. தூக்கம் ரெண்டுமே தானா குறையும்.. அதுனாலதான் வயித்த சுத்தமா வச்சிக்கணும்னு சொல்றது..

சரி.. இப்ப நான் சொல்ற மருந்த கேட்டுக்க..

சுக்கு - 1 துண்டு

மிளகு - 5

திப்பிலி - 2

நெல்பொறி - 2 ஸ்பூன்

நறுக்குமூலம் - 2 துண்டு

வெற்றிலை - 1

எடுத்து எல்லாத்தையும் ஒண்ணா சேத்து இடிச்சி கசாயம் செஞ்சி காலை மாலை சாப்பாட்டுக்கு முன்னால குடிச்சிக்கிட்டு வா.. இந்த வயித்துக் குமட்டல் எல்லாம் காணாம போயிடும்.

பாட்டி சொன்ன மருந்தைக் கேட்டு மனதில் புதுத் தெம்பு பெற்றவளாக அங்கிருந்து விடைபெற்றாள் மீனாட்சி.

நீர்க்கடுப்பு நீங்க...

நீர்க்கடுப்பு நீங்க...
இன்றைய காலகட்டத்தில் தூய்மையான நீர், சுகாதாரமான உணவு என்பது அரிதாகிவிட்டது. இத்தகைய காரணங்களால் உடலில் பல பாதிப்புகள் உண்டாகின்றன. அவற்றில் நீர் எரிச்சல், நீர்க்கடுப்பு சிறுநீர் வெளியேறாமை போன்றவை முக்கியமானது. அன்றாடம் பலர் இப்பாதிப்புகளால் அவதியுறுவதை நாம் கண்டு வருகிறோம். இதற்கு மருந்து மாத்திரைகளும் ஒரு காரணமாகும்.
இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்கள் சிறுநீரக பாதிப்புக்கு ஆளாக நேரிடலாம். இவற்றைத் தடுக்க அன்றே சித்தர்கள் பல வழிமுறைகளைக் கூறியுள்ளனர்.
நீர்க்கடுப்பு ஏற்படக் காரணங்கள்
உடலின் நீர்ச்சத்து குறைவே இதற்கு முக்கியக் காரணமாகும். ரத்தத்தில் கலந்துள்ள ரசாயன வேதிப் பொருட்களை சிறுநீரகத்தின் நெப்ரான்கள் பிரித்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
பொதுவாக ஒரு மனிதனுக்கு நாளொன்றுக்கு 167 லிட்டர் அளவு ரத்தத்தை வடிகட்டி பிரிக்கிறது. இதில் சுமார் ஒன்றரை லிட்டர் அளவு சிறுநீர்தான் வெளியேறுகிறது. மீதமுள்ளவை மீண்டும் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் சேர்ந்துவிடுகின்றன. இந்நிலையில் சிறுநீரின் அளவு குறைந்து கடினத் தன்மை அடைந்து வெளியேறும் போது நீர் எரிச்சல், நீர்கடுப்பு போன்றவை ஏற்படுகிறது. மேலும், மது, உற்சாக பானங்களால் கூட இது ஏற்படலாம். உடலிலிருந்து வெளியேறும் ரசாயன வேதிப் பொருட்களால்தான். இத்தகைய உபாதைகள் உண்டாகின்றன. உடல் சூட்டாலும், நீர்கடுப்பு ஏற்படும்.
நீர்கடுப்பு வராமல் தடுக்க
இளநீரைச் சீவி எடுத்து அதற்குள் சீரகம் 1 ஸ்பூன், சிறிதளவு சர்க்கரை, பாசிப்பயறு 10 கிராம் போட்டு ஓர் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் எடுத்து அவற்றை அரைத்து இளநீரில் கரைத்து அருந்தி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்களுக்கு ஆறுவேளை என அருந்தி வந்தால் நீர்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சருமம் பொலிவு பெறும். கண்பார்வை தெளிவடையும்.
நீர் எரிச்சல் தீர நன்கு தண்ணீர் அருந்த வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சம் பழச்சாறு எடுத்து அதில் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து தண்ணீரில் கலந்து அருந்துவது நல்லது.
பானகம் செய்து அருந்தலாம். அதாவது பனை வெல்லத்துடன் புளிக்கரைசலைச் சேர்த்து கரைத்து பானகமாக அருந்தலாம்.
சிறிதளவு வால்மிளகை பாலில் ஊறவைத்து அரைத்து அந்த பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் நீர்ச்சுருக்கு நீர்த்தாரை புண் போன்றவை நீங்கும்.
மண்பானையில் நீர் ஊற்றி அதில் விலாமிச்சம் அல்லது வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு நீர் எரிச்சல் நீங்கும். உடல் சூடு தணியும்.
முதல்நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலையில் அந்த உளுந்து ஊறிய நீரை மட்டும் பருகி வந்தால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு நீங்கும்.
பசலைக்கீரை நீர்க்கடுப்பைப் போக்கும் தன்மை கொண்டது. எனவே வாரம் இருமுறை பசலைக் கீரையை உண்டு வருவது நல்லது.
சீரகம், சோம்பு, வெந்தயம், சின்னவெங்காயம், கொத்தமல்லி விதை இவற்றை சம அளவு எடுத்து அரைத்து தயிர் அல்லது மோரில் கலந்து அருந்தி வந்தால் நீர்கடுப்பு உடனே நீங்கும்.
பூசணிக்காயை சாறு எடுத்து அதில் செம்பருத்திப் பூவை சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால் சொட்டு சொட்டாக சிறுநீர் கழிதல் குணமாகும்.
====================================
நீர்க்கடுப்பு நீங்க வெங்காயம் !!
!வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது. அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது.
தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.
வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள், அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம். சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.
வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு, வெங்காயத்தை நசுக்கி, சாறு பிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகுவிரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

முகப்பருவா..?

முகப்பருவா..?

அழகு என்பது உள்ளத்தின் வெளிப்பாடு என்கின்றனர் முன்னோர்கள். ஒரு மனிதனின் செயல்பாடுகள் அதாவது மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், சோம்பல், சலிப்பு இவை அனைத்தும் முகத்திலே தெரியவரும். அதுபோல் அகம் என்னும் உடலின் உட்பகுதியில் பாதிப்பு ஏதேனும் உண்டானால் அது முகத்தில் பிரதிபலிக்கும்.

உதாரணமாக ஒருவருக்கு மலச்சிக்கல் இருந்தால் அதன் வெளிப்பாடு முகத்தில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வெளிப்படும். அதுபோல் புறச் சூழ்நிலை மாறுபாட்டினாலும் உடல் மற்றும் சருமம் பாதிப்படையும்.

ஆகையால் முகம் மற்றும் சரும பாதுகாப்பு அனைவருக்கும் அவசியமாகிறது. இதனால்தான் அழகு நிலையங்கள் நோக்கி ஆண்களும், பெண்களும் படையெடுக்கின்றனர்.

சிலர் ரசாயனக் கலவைகளை முகப்பூச்சுகளாகப் பயன்படுத்துகின்றனர். இது தற்காலிய நிவாரணமே யொழிய நிரந்தரத் தீர்வல்ல. காலப்போக்கில் இவை எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கிவிடும்.

முகப்பரு

வளரும் இளம் ஆண், பெண் இருபாலரையும் மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான். உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது. இதன் முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.

முகப்பரு உள்ளவர்களுக்கு

முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.

சோற்றுக்கற்றாழை - 1 துண்டு

செஞ்சந்தனம் - 5 கிராம்

வெள்ளரிக்காய் - 2 துண்டு

சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊறவைத்து காய்ந்த பிறகு இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறி முகம் பளிச்சிடும்.

காரட் - 2 துண்டு

பாதாம் பருப்பு - 2

தயிர் - 1/2 கப்

இவற்றைச் சேர்த்து நன்கு அரைத்து முகத்தில் பூசி காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவி வந்தால் முகப்பரு மாறுவதுடன் முகச் சுருக்கம் நீங்கும்.

ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.

பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

அவரை இலையைப் பறித்து நன்கு நீரில் கழுவி சுத்தம் செய்து அதனைக் கசக்கி முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் நாளடைவில் மாறும்.

புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.

ஆரைக்கீரை

கீரையோ கீரை... ஆரைக்கீரை...!!!

தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தைப்
பொன்றாத நீரிழிவைப் புண்ணீரை -யென்றுமிந்த
ஆராரைச் சாராம லோட்டிவிடு நாலிதழால்
நீராரைக் கீரையது நீ
(அகத்தியர் குணவாகடம்)
பொருள் -

இது நன்கு சுவையைத் தரும். மன உளைச்சல், மூளைச் சூடு போன்றவற்றை நீக்கும். முக்குற்றங்களில் ஒன்றான பித்தத்தை தணிக்கும, நீரிழிவின் பாதிப்பைக் குறைக்கும். அடிக்கடி நீர் பிரிதலைத் தடுக்கும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலைக் குறைக்கும்.

ஆரைக் கீரையின் பயன்களை அன்றே தமிழ் மூதாட்டி ஔவையார் பாடியுள்ளார்.

நான்கு இதழ்களைக் கொண்ட இவை நீர்பகுதிகளில் அதிகம் வளர்வதால் இதனை நீராரை எனவும் அழைக்கின்றனர் .

இக்கீரையை சமைத்து உண்டுவந்தால் மேற்கண்ட பலன்களைப் பெறலாம்.

நீராரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆரைக்கீரை சூப்

ஆரைக் கீரை - 1 கைப்பிடி

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 5

பூண்டுப்பல் - 3

மிளகு - 5

சீரகம் - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

இஞ்சி - 1 சிறு துண்டு

உப்பு - தேவையான அளவு

இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.

சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.

சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும்.

பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும்.

வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.

மலரும் மருத்துவமும் - மல்லிகை

மலரும் மருத்துவமும் - மல்லிகை !!!

மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மலர்கள்.

இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.
மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும் கொடுக்கிறது. அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது. இதை மலர் மருத்துவம் என்கின்றனர். தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் M.ஆ.ஆ.கு. ஐ.கீ.இ.க, M.கீ.இ.கு படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார். அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார். பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டு பிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார். அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன என்பதை உணர்ந்தார். அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார். இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள். காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும். கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்

கறிவேப்பிலை -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

பல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான வழிகள்

பற்களுக்கு பின் உள்ள மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான சில எளிய இயற்கை வழிகள்!!!

பல் மஞ்சள் கறைகளை நீக்குவதற்கான  வழிகள்

ஒருவருக்கு வாய் பராமரிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது.
வாயில் பிரச்சனைகள் இருந்தால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் மிகவும் வேகமாக வரக்கூடும்.
மேலும் வாய் பிரச்சனை ஒருவரின் அழகையும் கெடுக்கும்.
அப்படி வாயில் இருக்கும் இன்று வரை பலரும் சாதாரணமாக நினைத்து விட்டுக் கொண்டிருக்கும் ஒன்று தான்
பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள்.
இந்த மஞ்சள் கறைகள் பற்களுக்கு பின் தானே உள்ளது என்று நினைத்து பலரும் சாதாரணமாக உள்ளனர்.
ஆனால் இது அப்படியே நீடித்தால், அதனால் பற்களில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிவரும்.
பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்குவதற்கான சில எளிய வழிகளை பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவிற்கு பற்களில் உள்ள கறைகளைப் போக்கும் சக்தி உள்ளது.
அதற்கு 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து,
ஈரமான டூத்பிரஷ் பயன்படுத்தி, பற்களைத் தேய்க்க வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 1-2 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கொய்யா இலை
கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று,
பின் அதனை துப்ப வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால்,
பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லை பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
இப்படி தினமும் இரண்டு முறை செய்து வந்தால், பற்கள் வெண்மையாவதோடு, ஈறுகளும் வலிமைப் பெறும்.
வெள்ளை வினிகர்
2 டீஸ்பூன் வெள்ளை வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு மற்றும் 1/2 கப் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து கலந்து,
தினமும் இருமுறை அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
இதன் மூலமும் பற்களின் பின் உள்ள மஞ்சள் நிற கறைகளை நீக்கலாம்.

மூட்டுவீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்

மூட்டுவீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்"!!!

சுக்கு 50 கிராம் பெருங்காயம் 50 எடுத்து பசும்பால் விட்டு அரைத்து
மூட்டுகளில் பற்று போட்டு வர வலியும் வீக்கமும் தீரும்

வேனல்கட்டிக்கு
வெயிலுக்கு வரும் வேனல் கட்டிக்கு உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் சோப்பை எடுத்துக்
கொஞ்சம் பொடி செய்து,
மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் குழைத்து
கட்டி வந்த இடத்தில் போடவும். கட்டி பழுத்து உடைந்துவிடும்.

சிறுநீர் எரிச்சல்
வெயில் காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சலுக்கு
தயிரை நன்றாகக் கடைந்து நீர் மோராகச் செய்து,
அதில் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் விட்டுக் குடித்துவந்தால் சரியாகிவிடும்.

நாள்பட்ட இருமல்
ஒரு ஸ்பூன் மிளகு, 3 ஸ்பூன் திப்பிலி இரண்டையும் கொஞ்சம் நெய் விட்டு வறுத்து,
பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.
அதனுடன் காய்ந்த திராட்சையைப் போட்டு
2 சுற்று சுற்றியெடுத்து, சுண்டைக்காய் அளவு காலை, மாலையும் சாப்பிடவும்.
அத்துடன் பாலும் சாப்பிட்டால் இருமல் நின்றுவிடும்.

பல்வலி
புதினா இலையை நன்றாகக் கழுவி நிழலில் உலர்த்தி எடுக்கவும்.
காய்ந்ததும் அதனுடன் உப்பு சேர்த்துப் பல் தேய்க்கவும்.
இப்படிச் செய்தால் பல்வலி, சொத்தை வராது. பல்லும் வெண்மையாக இருக்கும்.

உடல் பருமனாக...
வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி,
அதில் பனங்கற்கண்டு சேர்த்துக்
காலை, மாலை சாப்பிட்டுவந்தால் உடம்புக்கு நல்லது. குளிர்ச்சி தரும்.

தைராய்டு நோய்க்கு வைத்தியம் !!!
துளசி, கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதோடை இதுல 1 கைப்பிடி எடுத்து
அதோட, அதிமதுரம், கருஞ்சீரகம், ஜடமாஞ்சி, வில்வவேர் தலா 5 கிராம், சின்ன வெங்காயம்-4,
இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கஷாயம் செஞ்சு சாப்பிட்டு.. எல்லாம் சரியாப்போகும்.

சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?

சத்துக்கள் வீணாகாமல் எப்படிச் சமைப்பது?
சமையல் என்பது ஒரு கலை. நாம் உணவினை பல வழிகளில் சமைக்கிறோம். கொதிக்கவைத்து, ஆவியில் வேக வைத்து, எண்ணெயில் பொறித்து என இவ்வாறு சமைக்கப்படும் உணவின் நிறத்தை, மணத்தை, ருசியை முக்கியமாக அதில் உள்ள சத்துகளை எப்படி தக்க வைத்து கொள்வது?
• காய்களை கழுவிய பின் நறுக்கவும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள்வீணாகும்.
• எண்ணெயில் பொறித்த உணவை விட வேகவைத்த உணவை உண்பது நல்லது. ஏனெனில் அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.
• அதிகமான தண்ணீரில்,அதிக நேரம் உணவு பதார்தத்தை சமைக்கும் பொழுது அதில் உள்ள சத்துகள் அதிகளவில் வீணாகிறது.ஆதலால் தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருளைப் போடவேண்டும்.
• பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது.
• பச்சையாக உண்ணக் கூடிய காய்கறிகளை நன்றாக கழுவிய பின் சாப்பிடும் பொழுது நமக்கு தேவையான சத்துகள் வீணாகமல் கிடைக்கிறது.
• காய்களை நறுக்கி உடனடியாக சமைக்க வேண்டும். இல்லையேல் நிறம் மாறி வீணாகிவிடும்.
• கீரைகளை 4-5 நிமிடங்கள் வரை மூடாமல் சமைக்க வேண்டும். பிறகு மூடிக் கொள்ளலாம்.
• உருளை, கருனை, போன்ற கிழங்குகளின் தோலைசீவி சமைக்காமல் வேகவைத்து தோலை உரித்தால் உடம்புக்கு மிகவும் நல்லது. தோலிலும் சில சத்துகள் உள்ளது.
• பழங்களை பழச்சாறாக்காமல் அப்படியே சாப்பிடுவது தான் நல்லது.
• முட்டையை கொதிக்கவைத்த தண்ணீரில் 10 நிமிடத்திற்கு மேல் வேகவிடக்கூடாது. வேகவிட்டால் அதில் உள்ள சத்துகள் அழிந்து மஞ்சள் கரு பச்சையாகவோ, சாம்பல் நிறமாகவோ மாறி நம் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும்.
• ஒரு முறை பொறித்த எண்ணெயை திரும்பவும் பயன் படுத்தக்கூடாது.
• உணவை சமைத்தவுடன் சூடாக சாப்பிடுவதே நல்லது. திரும்ப திரும்ப சுடவைத்து சாப்பிடுவது கெடுதல்.
தரமான காய்கறிகளையும், தானியங்களையும் வாங்கினால் மட்டும் போதாது. அதனை முறையாக, சத்துகள் வீணாகாமல் சமைக்கவும் கற்று அனைவரும் பயனடையவேண்டும்.

60 டிப்ஸ் தினந்தோறும் ஆரோக்கியம்

60 டிப்ஸ்  தினந்தோறும் ஆரோக்கியம்!
அசத்தல் குடும்பத்துக்கு 60 டிப்ஸ்

நம் இந்தியப் பண்பாட்டை உலகம் மதிப்பதற்கான காரணங்களில் பிரதானமானது நமது குடும்ப அமைப்பு. வீடு என்பது சுவர்களால் ஆனது அல்ல. நமது உணர்வுகளால் ஆனது. நிற்பதற்கு நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கைமுறை நம் குடும்ப அமைப்பைக் கொஞ்சம் அசைத்துப்பார்த்திருப்பது என்னவோ நிஜம்தான். ஆனால், அழகான ஆரோக்கியமான குடும்பம் என்பது நடைமுறை சாத்தியமானதே. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?மனநல மருத்துவர் அசோகன், குழந்தைகள் மனநல மருத்துவர் பி.பி.கண்ணன், முதியோர் மருத்துவர் வி.எஸ்.நடராஜன், பிசியோதெரப்பிஸ்ட் விஸ்வநாதன், டயட்டீஷியன் குந்தளா ரவி ஆகியோர் தரும் டிப்ஸ்கள் இங்கே...
உடற்பயிற்சி
ஆரோக்கியமான வாழ்வுக்கு உடற்பயிற்சி அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நீண்ட நேரம் அமர்ந்தே வேலை பார்ப்பதால், உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இதனால், உடல் பருமன், சர்க்கரை நோய், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரித்துவிட்டது. இதைத் தவிர்க்க...
1 தினமும் காலை குறைந்தது 45 நிமிடங்கள் வாக்கிங் செல்லுங்கள். இயற்கையான காற்றை சுவாசித்தபடி செல்லும்போது, மூச்சு விடுவதில் சிரமம் இருக்காது. எடை சீராக இருக்கும். நோய்களும் அண்டாது. உடலுக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும்.
2 நடைப்பயிற்சிக்குப் பின், தசைகளை வலுவாக்கும் பயிற்சிகள் செய்ய வேண்டும். எடுத்ததும் கடினமான பயிற்சிகளைச் செய்யக் கூடாது. எளிய வார்ம் அப் பயிற்சிகளுடன் தொடங்க வேண்டும். அவரவர் உடல் நலம், வயது, பாலினம், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைக் கருத்தில்கொண்டு, குடும்ப மருத்துவர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகரிடம் உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகள் பெற வேண்டும்.

3 குழந்தைகள், தசையை உறுதிப்படுத்தும் எடை பயிற்சிகளைச் செய்யக் கூடாது. பெரியவர்கள், குழந்தைகள் என அவரவர்கானப் பிரத்யேகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
4 குழந்தைகளைப் பொறுத்தவரை பிரதானமான உடற்பயிற்சி என்பது விளையாட்டுதான். குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள்.
5நீச்சல், ஸ்கேட்டிங், டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற தனி விளையாட்டுகளிலும், கால்பந்து, கூடைப்பந்து போன்ற அணி விளையாட்டுகளிலும் அவர்களை ஈடுபடுத்துங்கள். அவர்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்கிறதெனக் கண்டறிந்து, அதில் அவர்கள் பிரத்யேகக் கவனம் செலுத்த ஊக்குவியுங்கள்.
6 முதியவர்கள் அன்றாடம் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. ஒரே நேரத்தில் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால், பத்து பத்து நிமிடங்களாகப் பிரித்துச் செய்யலாம்.
7 நடைப்பயிற்சி செய்யும்போது, மிதமான வேகத்தில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க வேண்டும். அதாவது, முதல் 5-10 நிமிடங்களுக்கு மிதமான வேகம். கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரித்து அடுத்த 20 நிமிடங்களுக்கு அதிவேகம். பின்னர் 5-10 நிமிடங்களுக்கு வேகத்தைப் படிப்படியாகக் குறைத்து இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டும்.

8 நடைப்பயிற்சிக்கு என பிரத்யேகமான காலணி களை உபயோகியுங்கள். இதனால் மூட்டுத் தேய்மானம் கட்டுப்படுத்தப்படும். குதிகால் வலி வராது.
9தசை இழுப்புப் பயிற்சிகளான பாதம் தொடுதல், கைகளை உயர்த்துதல், மணிக்கட்டைச் சுழற்றுதல், குதிகால் சுழற்றுதல், முட்டியை மடக்குதல், கழுத்து அசைவுகள் போன்றவற்றை தினமும் 5 முறை செய்யலாம்.
10 பெரியவர்கள், பேட்மிண்டன், டென்னிஸ், கிரிக்கெட் என ஏதாவது ஒரு விளையாட்டில் நேரம் கிடைக்கும்போது ஈடுபடலாம். இது உங்களை ஃபிட்டாக வைத்திருக்க உதவும்.
உணவு
எண் சாண் உடம்புக்கு வயிறும் பிரதானம்தான். நாக்குக்கு கீழே செல்வதைப் பற்றி நமக்கென்ன கவலை என்று இருப்பது, நோய்களை ரத்தினக் கம்பளமிட்டு வரவேற்பதற்குச் சமம். நோய்களுக்கு நோ என்ட்ரி சொல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் அவசியம். ஆரோக்கியமான குடும்பங்கள் சமையலறையில்தான் உருவாகின்றன.
1 சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். சமச்சீரான உணவு என்பது கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அடங்கியது. எனவே, உணவைக் காய்கறி, கீரை, அரிசி அல்லது கோதுமை என அனைத்தும் உள்ளதாகத் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.
2 செயற்கையான பழரச பானங்கள், குளிர்பானங்கள், சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகள், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

3 மூன்று வேளை உண்ணாமல் உணவை ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடுவது நல்லது. மூன்று வேளை உண்ணுவதாக இருந்தால், நான்கு மணி நேர இடைவேளையில் சாப்பிட வேண்டும். காலை உணவை அதிகமாகவும், மதியம் மிதமாகவும் இரவு குறைவாகவும் உட்கொள்ள வேண்டும்.
4 காலை மட்டும் அல்ல, எந்த வேளை உணவையும் எந்தக் காரணம் கொண்டும் தவிர்க்க வேண்டாம். காலை, மதியம், இரவு குறித்த நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
5 காலை நான்கு இட்லிகள், காய்கறிகள் சேர்க்கப்பட்ட சாம்பார், ஒரு டம்ளர் பால் அருந்தலாம். காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் முன்பு, ஏதாவது ஒரு பழத்தை ஜூஸாகக் குடிக்காமல் அப்படியே மென்று சாப்பிட வேண்டும். அல்லது ஃபுரூட் சாலட்டாகச் சாப்பிட வேண்டும். இதனால், தாடை தசைக்கள் வலுவாகும். பழங்களின் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
6 மதியம் அளவான சாப்பாட்டுடன் காய்கறிகள் நிறைய சேர்க்கப்பட்ட சாம்பார், கீரை, ரசம், தயிர் எனச் சாப்பிட வேண்டும்.
7 மாலை 4 மணி அளவில் முளைக்கட்டிய பயறை, வேகவைத்துச் சாப்பிடலாம். இரவு அளவாகச் சாப்பிடுவது நல்லது. இதனால், அஜீரணம், தூக்கம் கெடுதல் போன்ற சிக்கல்கள் ஏற்படாது. உடலும் தேவையற்ற கலோரி சேர்வதால் பருமனாகாமல் இருக்கும். இரவில் படுக்கப்போகும் முன்பு பால் அருந்த வேண்டும்.
8 டீ, காபி போன்றவற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட வேண்டும். அதாவது, காலை காபி என்றால் மாலை டீ என்றோ அல்லது காலை மாலை இருவேளையும் ஏதேனும் ஒன்றை மட்டுமோ சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிடுவது, அந்தப் பழக்கத்துக்கு நம்மை அடிமையாக்கி நம் உணவுப்பழக்கத்தைச் சீர்குலைக்கும்.
9 குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால், வேறு வேறு வடிவங்களில் உணவுகளை செய்து தர வேண்டும். முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டாம். இதனால், பிற்காலத்தில் அவர்கள் அந்த உணவை உண்ணும் பழக்கம் இல்லாதவர்களாக மாறிவிட வாய்ப்பு உண்டு.
10 தினமும் ஒரு டீஸ்பூன் நட்ஸ் வகைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரி என அனைத்தும் கலந்த நட்ஸில் ஒரு டீஸ்பூன் சாப்பிடுவது உடலுக்குத் தேவையான சத்துக்கள் சேர்த்துப் பலத்தைக் கூட்டும்.
வீடு
வீடு என்ற சொல்லுக்கு சொர்க்கம் என்றோர் பொருள் உண்டு. நம் வீட்டை சொர்க்கம் போன்று வைத்திருப்பது நமது கைகளில்தான் உள்ளது. கொஞ்சம் சிரத்தை எடுத்துச் சில செயல்களைச் செய்தாலே, நமது வீடு நம்மை மட்டுமல்ல, வீட்டுக்கு வருபவர்களையும் பரவசப்படுத்தும் இனிமையான இடமாக மாறும்.
1வீட்டின் அமைப்பை நல்ல ஆரோக்கியமான உணர்வுகளைத் தூண்டும் வண்ணங்களால் ஆனதாக மாற்றுங்கள். வண்ணங்களுக்கும் நம் எண்ணங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கண்களை உறுத்தாத, இயல்பான வண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அடிக்கலாம். பொதுவாக, சமையலறை மற்றும் ஹால் மஞ்சள் நிறத்திலும் படுக்கை அறை பச்சை நிறத்திலும் இருப்பது நல்லது. ஆனால், நிறங்கள் தனிப்பட்ட ரசனை மற்றும் மன அமைப்புக்கு ஏற்ப மாறுபடுபவை. எனவே, உங்களுக்குப் பிடித்த அல்லது உங்களுக்கு அமைதி தரக்கூடிய நிறங்களையே தேர்ந்தெடுத்து அடியுங்கள்.

2 பகலில் மின்சார செலவில்லாமல் காற்றும் ஒளியும் வரும்படி கட்டப்பட்டிருப்பதே நல்ல வீடு என்று சொல்வார்கள். இன்றைய நகர நெருக்கடியில் அதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், வீட்டில் எப்போதும் வெளிச்சமும் காற்றும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஹாலிலும் சமையலறையிலும் வெளிச்சமான ஃப்ளோரோசன்ட் பல்புகளையும், படுக்கை அறையில் சற்றே ஒளி குறைவான விளக்குகளையும் பயன்படுத்தலாம். இரவு தூங்கும்போது, நீல நிற ஒளிதரும் ஜீரோ வாட்ஸ் பல்பைப் பயன்படுத்துவது நல்லது. தேவையான அளவு காற்றும் வெளிச்சமும் நம்மை எப்போதும் உற்சாகமான மனநிலையில் வைத்திருப்பவை.
3 நம் அழகுணர்வின், நேர்த்தியின் வெளிப்பாடு நம் வீடுதான். எனவே அதை எப்போதும் சுத்தமாகவும் அலங்காரமாகவும் வைத்திருங்கள். அலங்காரம் என்பது வேறு, ஆடம்பரம் என்பது வேறு. பொருட்களை நேர்த்தியாகவும், சுத்தமாகவும் அந்தந்த இடத்தில் வைத்திருந்தாலே வீடு பளிச்சென அழகாகத் தோன்றும். வாய்ப்பு இருந்தால் சித்திரங்கள், கைவினைப்பொருட்கள், கலை வேலைப்பாடுகள் கொண்டு நம் ரசனைக்கேற்ப வீட்டைஅலங்கரிக்கலாம்.
4 வீட்டின் முன்புறமோ பின்புறமோ தோட்டம் அமைத்து, அன்றாட உணவுக்குப் பயன்படும் வாழை, தென்னை, கொய்யா, பப்பாளி, முருங்கை போன்ற மரங்களையும் வீட்டின் முன்புறம் குளிச்சியான காற்று கிடைக்க வேப்பமரமும் வளர்க்கலாம். அடுக்குமாடிக் கட்டடம் எனில், உரிமையாளர்கள் அனைவரும் சேர்ந்து, மொட்டைமாடியில் தோட்டம் அமைத்து, அன்றாடம் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டு வளர்க்கலாம். இயற்கை விவசாயமுறை என்பதால், சத்துக்கள் சேரும். செலவுகள் மிச்சமாகும். தோட்ட வேலையில் ஈடுபடும்போது மனதுக்கு இதமானதாக இருக்கும். கலோரிகளும் செலவாகும்.

5 வீட்டை, பசுமை வீடாக மாற்றுவது உங்களை உற்சாகமாகவும், மனநிறைவோடும் வைத்திருக்கும். வீட்டுக்குள் ஆங்காங்கே மணி பிளான்ட், பூச்செடிகள் போன்ற குறைந்த வெளிச்சத்தில் வளரும் தாவரங்களைவைக்கலாம். அதிகத் தண்ணீரும் தேவைப்படாது. இயற்கைக்கும் நமக்குமான நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க... ஆரோக்கியம் நம்மை அரவணைக்கும்.
6 வீட்டில் ஒரு முதலுதவிப் பெட்டி கட்டாயம் இருக்கட்டும். சிறுசிறு காயங்களுக்குக் கட்டுப்போட தேவையான பருத்தி பஞ்சு, பேண்டேஜ், டெட்டால் போன்ற கிருமிநாசினி, ஆயின்மென்ட், சாதாரணத் தலைவலி, காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை, தீக்காயத்துக்கு சில்வர் சல்ஃபாடையாசின் ஆயின்மென்ட், வயிற்று வலிக்கு டைசைக்லமின், டிரோட்டோவெரின் உள்ள வலி நிவாரணிகள் போன்றவை அதில் இருக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ள மருந்துகளின் காலாவதித் தேதிகளைக் கவனத்தில்கொண்டு மாற்றிக்கொண்டே இருப்பது மிகவும் முக்கியம்.
7 ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நூலகம் கட்டாயம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிறிய அலமாரியிலாவது கொஞ்சம் புத்தகங்களை வைத்திருங்கள். உங்கள் மனதுக்குப் பிடித்த உங்களின் தொழிலுக்குப் பயன்படக்கூடிய, உங்கள் குழந்தைகளின் நலனுக்கு வித்தாகும் புத்தகங்களை வாங்கி அடுக்குங்கள். இரவு படுக்கப் போகும் முன் அரை மணி நேரம், புத்தகம் படிப்பது நம் மனதைப் புத்துணர்ச்சியாக்கும். நம் குழந்தைகளுக்கும் வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கத் தூண்டுதலாய் இருக்கும்.

8 வீட்டின் தட்பவெப்ப நிலைக்கும் நம் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உங்கள் வீட்டின் நிலவியல் அமைப்புக்கு ஏற்ற சீதோஷ்ணம் வீட்டுக்குள்ளும் இருப்பது நம் உடலுக்கும் மனதுக்கும் மிகவும் நல்லது. ஏ.சி இருக்கிறது என்பதால் எந்த நேரமும் ஏ.சியிலேயே இருக்க வேண்டும் என்று இல்லை. கோடை காலத்தில் ஏ.சியைப் பயன்படுத்துவதில் தவறு இல்லை. மழைக் காலத்திலும் அதைப் பயன்படுத்துவது மின்சார செலவை மட்டுமின்றி உங்கள் மருத்துவச் செலவையும் கூட்டி ஆரோக்கியத்துக்கு விலை வைத்துவிடக்கூடும்.
9 அண்டை வீட்டாருடன் நல்ல சுமுகமான தொடர்பில் இருங்கள். இது இருவருக்குமே பரஸ்பரம் மிகவும் பயனுடையது. இதனால், உங்கள் வெளியுலகத் தொடர்பு அதிகரிக்கும். சுற்றிலும் நடக்கும் விஷயங்கள் உங்கள் காதுக்கு வரும். நீங்கள் வீட்டில் இல்லாதபோது, வீட்டின் பாதுகாப்பு குறித்த அச்ச உணர்வு ஓரளவு நீங்கும். குழந்தைகளை அண்டை அயலாருடன் பழக அனுமதிப்பது குற்றம் அல்ல. குழந்தைகள்தான் நல்லெண்ணத் தூதுவர்கள். அவர்கள்தான், அக்கம்பக்க வீட்டாருடன் சுமுகமான சூழலை விரைவில் ஏற்படுத்துவார்கள். இதனால், குழந்தைகளுக்கும் வெளியுலகத் தொடர்பு கிடைக்கும்.
10 படுக்கையறையில் மெத்தை, தலையணைகள் மிகவும் கடினமானதாகவும் இல்லாமல், மிகவும் லேசானதாகவும் இல்லாமல், ஓரளவு இலகுவானதாக, பருத்திப்பஞ்சால் ஆனதாக இருப்பது நல்லது. இதனால் முதுகுவலி, கழுத்துவலி இருக்காது. இடை விழிப்பற்ற சீரான ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.
குடும்பம்
`குடும்பம்தான் சமூகத்தின் சிறிய அலகு. சமூகம் என்பது ஒரு குடும்பம்' என்று சொல்வார்கள். அழகான ஆரோக்கியமான குடும்பங்களிலிருந்தான் சிறந்த மனிதர்கள் உருவாகிறார்கள். குடும்ப உறவுகளை ஆரோக்கியமாகவும், அன்னியோன்னியத்தோடும் வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம். இது நம்மை பாதுகாப்பானவர்களாகவும் உற்சாகமானவர்களாகவும் வைத்திருக்க பெரிதும் உதவும்.
1தினமும் காலை 5 - 6 மணிக்கு எழும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதிகாலை எழுவது, ஒரு நாளை நன்கு திட்டமிட உதவும். மேலும், நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும். குழந்தைகள் அதிகாலையில் எழுந்து படித்தால், பாடங்கள் நன்கு மனதில் பதியும். அவர்களின் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத்திறன் (ஐ.க்யூ) மேம்படும்.

2 தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பயிற்சிகளைச் செய்யலாம். உடற்பயிற்சிகளை வீட்டில் செய்வதற்கு முன் தகுந்த நிபுணர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றுச் செய்வது நல்லது.
3 குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் உணர்வுகளையும் மதியுங்கள். அனைவரின் விருப்பங்களையும், ரசனைகளையும், சுவையையும் நன்கு அறிந்துகொள்ளுங்கள். அன்பைப் பகிர்வது என்பது பொறுப்பெடுத்துக்கொள்வது, போதுமான சுதந்திரம் தருவது. எனவே, மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள். ஆரோக்கியமான உரையாடலைச் செய்வதற்கான குடும்ப ஜனநாயகம் எப்போதும் வீட்டில் இருக்கட்டும்.
4 தினமும், ஒருவேளை உணவையாவது குடும்பத்தில் உள்ள அனைவருடனும் சேர்ந்து உண்ணுங்கள். முடிந்தவரை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுங்கள். ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடும்போதுதான், ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்கள், வெறுப்புகள், தேர்வுகளை நம்மால் நன்கு புரிந்துகொள்ள முடியும். குழந்தைகளை உணவு நேரத்தில் சுதந்திரமாக இயங்கவிடுங்கள். தங்கள் முன் உள்ளவற்றை அவர்கள் விருப்பப்படி சாப்பிடட்டும். அதே சமயம், எச்சில் விரலை சூப்பக்கூடாது. கீழே சிந்தாமல், பொறுமையாகச் சாப்பிட வேண்டும். சிந்திய பருக்கைகளை கையில் எடுத்து சாப்பிடக் கூடாது போன்ற ஆரோக்கியமான, சுத்தமான உணவுப்பழக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

5 தொலைக்காட்சி, மொபைலில் நேரம் செலவிடுவதற்குப் பதில், வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருமே சேர்ந்து அமர்ந்து மனமவிட்டுப் பேசுங்கள். உரையாடல் பாசிடிவ்வான சொற்களில் இருக்கட்டும். பொருளாதாரம் உள்ளிட்ட குடும்பத்தின் சூழ்நிலை ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கட்டும்.
6குடும்ப சூழ்நிலையைப் பற்றி மட்டுமின்றி, பொதுவான விஷயங்களையும் பேசுங்கள். கலகலப்பான, நகைச்சுவைகள் நிறைந்த உரையாடல்களை உருவாக்குங்கள். மனிதர்களைப் பற்றி பேசுவது, சம்பவங்களைப் பற்றி பேசுவது, கருத்தியல்களை (கான்செப்ட்ஸ்) பற்றி பேசுவது என உரையாடல்களை மூன்று வகைகளாகச் சொல்வார்கள். மனிதர்களை பற்றி பேசுவது சாதாரண நிலை. இதில் உரையாடல் நிகழ்வதைத் தவிர, வேறு பலன்கள் ஏதும் இல்லை. சம்பவங்களைப் பற்றி பேசுவது அதற்கு அடுத்த நிலை. இது, நமது அனுபவங்களை மற்றவர்களின் அனுபவங்களுடன் ஒப்பிட்டுக்கொள்ளவும், இதனால் நம்மைச்செம்மைப்படுத்திக்கொள்ளவும் உதவும். கருத்தியல்களைப் பற்றி பேசுவது மூன்றாவது நிலை. இது, நம்மைப் பற்றி மட்டுமின்றி நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களையும் இந்த சமூகத்தைப் பற்றியும் புரிந்துகொள்ள உதவும். இந்த மூன்று நிலை உரையாடல்களுமே தவிர்க்க இயலாதவை என்றாலும், உரையாடல்களை மூன்றாவது நிலை நோக்கிக்கொண்டு செல்லப் பழகுங்கள்.
7 வாரம் ஒருமுறை எங்காவது வெளியில் செல்வது, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலா செல்வது என்பதைப் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் குடும்பத்தினருடன் இனிமையான தருணங்களை உருவாக்கி, நீங்கள் ஒரு குடும்பம் என்கிற ஐக்கிய உணர்வையும் உணர்வுபூர்வமான மனநிலையையும் உங்களுக்கு இடையே உருவாக்கும்.

8 பண்டிகை நாட்களையும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற வீட்டு விசேஷங்களையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். `வேலை இருக்கிறது வர முடியாது. நீங்களே கேக் கட் பண்ணிடுங்க, எனக்கு மீட்டிங் இருக்கு' என்று சொல்வதை இயன்றவரை தவிருங்கள். வீடும் வேலையும் நமது இரண்டு கண்கள். ஒன்றை ஒன்று பாதிக்காதவாறு கையாளுங்கள்.
9சமையல் முதல் எல்லா வீட்டு வேலைகளையும், பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று இல்லை. சமைப்பது, துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் ஆண்களும் உதவுதில் தவறே இல்லை. நம் வீட்டு வேலையைச் செய்வதில் நமக்கு என்ன தயக்கம் என்ற மனநிலை தேவை. வீட்டு வேலைகளை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொள்ளுங்கள். குறைந்தபட்சம் சமையல் செய்யாவிட்டாலும் சமையலுக்குத் தேவையான சிறுசிறு உதவிகளையாவது செய்துகொடுங்கள். வார இறுதிகளில் சமைப்பது, வீட்டை சுத்தமாக்குவது போன்ற வேலைகளைப் பகிர்ந்துகொள்வது கணவன் மனைவிக்கு இடையே நல்ல இணக்கத்தையும் அன்பையும் ஏற்படுத்தும்.
10 குடும்பத்துக்கு என நீங்கள் ஒதுக்கும் நேரத்தை சிறப்பான நேரமாக பயன்படுத்துங்கள் (குவாலிட்டி டைம்). எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைவிட எப்படி அந்த நேரத்தைச் செலவிடுகிறோம் என்பதே முக்கியம். எனவே, நீங்கள் செலவிடும் நேரம் எப்போதும், நினைவில் நிற்கும் இனிமையான தருணங்களாக, ஆரோக்கியமான தருணங்களாக இருக்கட்டும். இந்த உலகில் நாம் விட்டுச்செல்வது நம்மைப் பற்றிய நினைவுகளை மட்டும்தான். அந்த நினைவுகள் நல்ல நினைவுகளாக இருக்க நாம் செலவிடும் நேரம் சிறந்த நேரமாக இருக்க வேண்டும்.
குழந்தைகள் பராமரிப்பு
`கடவுள் மனிதன் மேல் நம்பிக்கை இழக்காததன் அடையாளம் குழந்தைகள்' என்பார் தாகூர். சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1 இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.
2 இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை.

3 சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு முதல் பத்து சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.
4 ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.
5 மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.
6தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

7ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.

8 குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே, அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத் தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.
9 மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.
10 தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.
முதியோர் நலன்
இரண்டாவது பால்யம் எனப்படும் முதுமையை உற்சாகமாக மாற்றுவது குடும்பத்தின் கைகளில் உள்ளது. முதியவர்கள் அனுபவஞானத்தின் விளைச்சல்கள். அவர்களை போற்றிப் பாதுகாப்பது நம் வாழ்வை அர்த்தப்படுத்துவதோடு நம்மை பக்குவமானவர்களாகவும் மாற்றும்.
1 முதியோர் எதிர்பார்ப்பது உணர்வுபூர்வமான அன்பு. தனியறை, ஏ.சி, டி.வி போன்ற வசதிகள் மட்டுமல்ல. எனவே, அன்பை, பாசத்தை சொற்களால் வெளிப்படுத்துங்கள். காலையில் செல்லும்போது, ‘சென்று வருகிறேன்’ என்று சொல்வதும், மாலையில் வந்ததும் ‘எப்படி இருக்கிறீர்கள்’ எனக் கேட்பதும் அவர்களை சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உணரவைக்கும்.
2 முதியவர்கள் அவர்களின் நண்பர்களுடன் தொடர்புகொள்ளத் தேவையான வசதிகளைச் செய்துதர வேண்டும். நண்பர்களுடன் அளவளாவுவதால் தனிமையில் இருக்கிறோம் என்கிற மன அழுத்தம் குறையும்.
3வீட்டுக்கு யாராவது நண்பர்கள் வந்தால் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். இதனால், அவர்களுக்கு `தனிமைப்படுத்தப் படுகிறோமோ’ என்ற உணர்வு வராமல், பாதுகாப்பான உணர்வைத் தரும்.

4 பெரியவர்களை கேலி, கிண்டல் செய்யக்கூடாது. குறிப்பாக, முதுமையினால் அவர்களுக்கு ஏற்படும் இயலாமை, மறதி போன்றவற்றைக் குத்திக்காட்டியோ, பரிகசித்தோ கிண்டலாகவோ பேசக்கூடாது. இதனால் அவர்கள் மனம் புண்படும்.
5 சர்க்கரைநோய், இதய நோய், மூட்டுவலி போன்ற நோய் உள்ள முதியவர்களுக்குத் தேவையான மருந்துகளை தீர்வதற்குக் கொஞ்சம் முன்பாகவே வாங்கிவைத்திருப்பது நல்லது. முதியோருக்கு ஃப்ளூ, டெட்டனஸ் உள்ளிட்ட நோய்த்தொற்றுத் தடுப்பூசிகளையும், நிமோனியா தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டும்.
6 முதியோருக்கான டயட், உடற்பயிற்சி, மருத்துவம் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு, அல்ட்ரா சவுண்ட், கண்பரிசோதனை போன்றவற்றை ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்ள வேண்டும். 50 வயதைக் கடந்த பெண்கள் தைராய்டு பரிசோதனை, மார்பகப் புற்றுநோய்க்கான மேமோகிராம் பரிசோதனை, கர்பப்பை வாய் நோயைக் கண்டறியும் பேப்ஸ்மியர் பரிசோதனை போன்றவற்றை அவசியம் செய்துகொள்ளா வேண்டும்.

7முதியவர்களை செல்போன், கம்ப்யூட்டர் போன்ற நவீன மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். இது அவர்களுக்கு அப்டேட்டட் ஆக உள்ளோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, அவர்களின் தன்னம்பிக்கைக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
8 குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, கடைகளுக்குச் சென்றுவருவது போன்ற சின்ன சின்ன வேலைகளை வீட்டு முதியவர்களைச் செய்யவைக்கலாம். இதனால், நாமும் இந்தக் குடும்பத்தின் ஓர் அங்கம். எனக்கும் பொறுப்புகள் இருக்கின்றன என்கிற மனநிலை அவர்களுக்கு ஏற்படும்.
9 முதியவர்களிடம் கொஞ்சம் பாக்கெட் மணி கொடுக்கலாம். அவர்களுக்கு கோயில்களுக்கோ வேறு எங்கேனும் செல்லும்போதோ செலவு செய்வதற்கும், குழந்தைகளுக்கு சிறுசிறு திண்பண்டங்கள் வாங்கித் தரவும் உதவும். இதனால், குழந்தைகளுக்கும் தாத்தா பாட்டிக்குமான உறவு பலப்படும்.
10 முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, முதியவர்களிடம் தேவையான ஆலோசனை கேட்கலாம். அவர்களின் அனுபவம் நமக்கு உதவியாக இருக்கும். அதே சமயம், முதியவர்கள் இளையோரின் எல்லா விஷயங்களிலும் தலையிட்டு தன்னுடையக் கருத்தைச் சொல்லக் கூடாது. இது தேவையற்ற தொந்தரவாக இளையோரால் பார்க்கப்படும்.

முதியோர் டயட்
அன்றாட தேவை: 2,320 கி.கலோரி முதல் 2,730 கி.கலோரி வரை. புரதம் - சுமார் 60 கிராம் புரதம். 50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் புரதம் தேவையாக இருக்கும்
காலை 7 மணி: பால் / சத்துமாவுக் கஞ்சி / கிரீன் டீ / காபி / டீ. (முடிந்தவரை காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது)
8 மணி: இட்லி - 4 / தோசை - 3 / பொங்கல் - 250 கிராம் / உப்புமா - 250 கிராம், (தொட்டுக்கொள்ள - புதினா, கொத்தமல்லி சட்னி வகைகள், சாம்பார்)
11 மணி: காய்கறி சூப், ஒரு ஆப்பிள்
மதியம் 1 மணி: சாதம் - 300 கிராம், பருப்பு, இரண்டுவிதமான காய்கறிகள், தயிர் - ஒரு கப், வேக வைக்கப்பட்ட கோழி இறைச்சி அல்லது மீன் - 75 கிராம், முட்டை வெள்ளைப் பகுதி மட்டும் - 75 கிராம். இனிப்பு அல்லது பழங்கள் - 25 கிராம்.
மாலை 4 மணி: கிரீன் டீ, சுண்டல் - 75 கிராம்
இரவு 8 மணி: எண்ணெய் சேர்க்காத சுக்கா ரொட்டி, பருப்பு தால் (அ) ஏதேனும் ஒரு டிஃபன் + காய்கறி சாம்பார்
எண்ணெய் மிகக் குறைந்த அளவு சேர்க்கலாம். பொரித்ததைத் தவிர்க்க வேண்டும்.

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்

எளிய மருத்துவம்-இய‌ற்கை வைத்தியம்!

நரம்பு சுண்டி இழுத்தால்
ஊற வைத்து, முளைக்க வைத்த தானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

பல்லில் புழுக்கள்
சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

உடல் பருமன் குறைய
வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.
தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.
கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.
வலுவான பற்கள்
வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.
உடல் சூடு
ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

மருந்தில்லா மருத்துவம்:அஜீரணம்,குடல்புண்,வாயு தொல்லை, வயிற்று வலிமலச்சிக்கல்,சீதபேதி,பித்த வெடிப்பு, மூச்சுப்பிடிப்பு,சரும நோய்,தேமல்
மருந்தில்லா மருத்துவம்:அஜீரணம்,குடல்புண்,வாயு தொல்லை, வயிற்று வலிமலச்சிக்கல்,சீதபேதி,பித்த வெடிப்பு, மூச்சுப்பிடிப்பு,சரும நோய்,தேமல்

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலிகை தரும் மருத்துவ பயன்கள்

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.

தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.
அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம்.
துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும். குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசிபொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும்.
தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும். சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும்.
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும். இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி ?

சத்தான எள்ளு துவையல் செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

கறுப்பு எள்ளு – 4 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
புளி – ஒரு பெரிய நெல்லிக்காயளவு
பூண்டு பற்கள் – 2
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்றவாறு

செய்முறை :

* எள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் போட்டு, வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

* அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் அதில் மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மேலும் ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும்.

* பின்னர் எல்லாம் ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்தால் போதும். கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

* எலுமிச்சம் சாதம் / தேங்காய் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

சத்தான அரிசி கஞ்சி செய்வது எப்படி ?

சத்தான அரிசி கஞ்சி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :

அரிசி குருணை – 250 கிராம்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 3 பற்கள்
தேங்காய் பால் – 3 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

* அரிசி குருணையை நன்றாக கழுவி வைக்கவும்.

* குக்கரில் 750 மில்லி தண்ணீரை விடவும்.

* அதில் அரிசி குருணை, வெந்தயம், பூண்டு மற்றும் உப்பை போட்டு குக்கரை மூடி வைத்து அடுப்பில் கொதிக்க வைக்கவும்.

* முதல் விசில் வந்தவுடன் அடுப்பின் வேகத்தை குறைத்து 7 – 8 நிமிடங்களுக்கு பிறகு அடுப்பை அணைக்கவும்.

* பின்னர் பிரஷர் அடங்கிய பின் குக்கர் மூடியை திறந்து தேங்காய் பாலை விட்டு 3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து இறக்கி பரிமாறவும்.

* இதற்கு தொட்டு கொள்ள புதினா துவையல், கறிவேப்பிலை துவையல் சுவையாக இருக்கும்.

வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி?

புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

என்ற குறள் உடலின் தூய்மை மற்றும் மனதின் தூய்மை பற்றி வலியுறுத்துகிறது. இந்த அகத் தூய்மை மற்றும் புறத்தூய்மை தாண்டிய மூன்றாவது ஒரு தூய்மை குறித்து சித்தர் பெருமக்கள் பேசுகின்றனர். அதுவும் அகத் தூய்மைதான். நம் உடலின் உள்ளுறுப்புகளை பற்றியது அது.

பிறந்த நிமிடம் முதல் இறுதி மூச்சுவரை ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டிருக்கும் உள்ளுறுப்புகளின் தூய்மை மற்றும் ஓய்வினை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர்.
அதன் பொருட்டே சீரான இடைவெளிகளில் உபவாசம் எனும் உண்ணா நோன்பினையும், உள்ளுறுப்புகளை சுத்தி செய்யும் வகைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.அந்த வகையில் இன்று வயிற்றினை சுத்தம் செய்யும் முறை பற்றி பார்ப்போம்.

நம் உடலிற்குத் தேவையான சத்துகள் நாம் உண்ணும் உணவில் இருந்தே பெறுகிறோம். உணவில் இருந்து சத்துக்களை உடலுக்கு பிரித்தளிக்கும் வேலையை செய்வது நமது வயிறு. இதனை தூய்மையாய் வைத்திருந்தால் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும் என்கின்றர் சித்தர் பெருமக்கள்.
எப்படிச் சுத்தமாய் வைத்திருப்பது?

எளிய விதிகள்தான், யாரும் கடைபிடிக்கலாம்.

ஒரு நாளிற்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும்.

வருடத்திற்கு இரு முறை பேதி மருந்து உட்கொள்ள வேண்டும்.

அதென்ன பேதி மருந்து?

இந்த பேதி மருந்தைப் பற்றி கோரக்கர் தனது “ரவிமேகலை” நூலில் “பேதிகல்பம்” என்ற பெயரில் அருளியிருக்கிறார்.

சித்தமுடன் குமரிமடல் பெரிதா யைந்து
சீவிய தன்னமோர் முடாவி லிட்டு
வித்தகமாய்க் கடுக்காய்த்தூள் பலமுந் தாக்கிப்
பிசைந்திடவே செயநீராய் நீர்த்துப் போகும்
சுத்தமுடன் வடிகட்டித் தேசிச் சாற்றுத்
துளிபத்து இட்டுவண்ணப் பேதி யாகிப்
பித்தமுடன் வாத ஐயபேதம் நீங்கும்
பிசகாமல் முக்காலை யருந்தல் நன்றே.

– ரவிமேகலை.

சோற்றுக் கற்றாழை மடல் களில் பெரிதாக உள்ளதாகப் பார்த்து ஐந்து மடல்களைக் கொண்டுவந்து, அவற்றை சீவி அதில் உள்ள சோற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கடுக்காய்த்தூள் ஒரு பலம் போட்டுப் பிசைந்தால் அது நீர்த்துப் போய் விடுமாம். பின்னர் அதனை வடிகட்டி எடுத்து, அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு பத்துத் துளி விட்டு கலந்து மூன்று நாட்கள் காலை வேளையில் தொடர்ந்து அருந்த வேண்டுமாம். அப்படி அருந்தினால் வயிறு கழியுமாம். அத்துடன் வாதம், பித்தம், ஐயம் ஆகிய மூன்று குற்றங்களும் நீங்கும் என்கிறார்.
இதன் மூலம் வயிறு சுத்தமாகி, அதன் செயல்பாடு மேம்படும் என்கிறார்.

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,
சுக்கின் மருத்துவபலன்கள் பற்றி சில துளிகள்
அறிவோம்..!

இஞ்சி காய்ந்தால், சுக்கு. காரம், மணம் நிறைந்த சுக்கு, உடம்பில் சூட்டை
ஏற்படுத்தும். அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை
வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.

தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோ, உரசியோ (இழைத்து)
நெற்றியில் பூசினால், அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன்
கிடைக்கும்.
தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்.
எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று
(பத்து) போட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்.
வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும்.
வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும்.
அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம்.
உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோ, கழுவியோ விடலாம்.

வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, விலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்,
குடைச்சல், புளித்த ஏப்பம், அஜீரணக்கோளாறு, மார்பில் எரிச்சல்,
மூக்கடைப்பு, ஜலதோஷம், காதில் குத்தல் வலி, நாக்கு சுவையின்மை
மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்படும் நேரங்களிலும்
இந்த சுக்கு கைகொடுக்கும். 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து
அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து எடுத்து
தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்.
இந்த சுக்கு கஷாயத்தை காலையில் குடித்தது போலவே
மாலையிலும் குடிக்க வேண்டும். இப்படி 20 முதல் 40 நாட்கள் வரை
செய்து வந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் விலகும்.
சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம்.
பனிக்காலங்களில் கிராம்பு, மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

சாப்பாடு, தூக்கமின்மை, அதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால்
சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு ஏற்படும்.
இன்னும் சிலருக்கு நெஞ்சுப்பகுதியை உள்ளுக்குள் அழுத்துவது போன்ற
உணர்வு, புளியேப்பம் ஏற்படும். அந்தச் சமயங்களில்
அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன், அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து
வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்த வத்தக்குழம்பு சாப்பிட்டு வந்தால்
நோய்கள் இல்லாமல் வாழலாம்.
முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில்
சுக்கை சேர்த்து வந்தால் கீல் வாத நோய்கள், மலச்சிக்கல்,
ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.

சுக்கு காபிமருத்துவப் பயன்கள்:

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து,நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும்,வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலிமுற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்துகுடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தைஇவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர,
கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால்,வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து,நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக்குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து,மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்தியபோதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி,தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால்,தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாகஅரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்புநிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச்சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள்அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்றுதின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம்முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில்கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால்,வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்துகஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டுநாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத்தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலிதீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

எனது அனுபவம் !!

மழைக் காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுவோர் உண்டு. நெஞ்சில் கபம் சேரச் சேர பிரச்சனை தீவிரமாகிறது. அலோபதி மாத்திரைகளால் தாற்காலிக நிவாரணம் கிடைக்கலாம்; ஆனால், இந்த மாத்திரைகள் சளியை உடலிலிருந்து வெளியேற்றாமல் இருப்பதால் பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதைக் குணப்படுத்த சிறந்த இயற்கை மருத்துவம் இந்த சுக்கு மல்லி காப்பியே... காபி, டீ, கொக்கோ போன்ற பானங்கள் இரைப்பையை பாதித்து சளிச்சவ்வை சீர்குலைத்து சீரணத்தைத் தடுக்கிறது. பல சமயங்களில் இதயத்தைக் கூட ஒழுங்கு தவறி துடிக்கச் செய்கின்றன. இப்பானங்ளில் உள்ள சர்க்கரை உடலுக்கு சூட்டை அளிக்குமே தவிர, சத்துக்களைத் தருவதில்லை. ஆகவே இது போன்ற இயற்கை மூலிகை பானங்களை வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது அருந்துவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும். 

மறந்து போன மருத்துவ உணவுகள்

மறந்து போன மருத்துவ உணவுகள் 1

உணவே மருந்து
மாறிவரும் வாழ்க்கைமுறையும் உணவுப்பழக்கமும் பலவித நோய்களுக்கும் வலியச் சென்று அழைப்பிதழ் நீட்டுகின்றன. 'வாயைக் கட்டி’ வாழ்ந்த நம் முன்னோர் இத்தனை விசித்திரமான வியாதிகளுக்கு ஆளானது இல்லை. நம் முன்னோர் பின்பற்றிய மருத்துவ உணவுகளை... நாம் மறந்துபோன பொக்கிஷங்களை இங்கே விவரிக்கிறார் சித்த உணவியல் நிபுணர் அருண் சின்னையா.

அரைக்கீரைப் பச்சடி
தேவையானவை: அரைக்கீரை - 100 கிராம், கொத்தமல்லி இலை - 100 கிராம், கறிவேப்பிலை - 100 கிராம், புதினா இலை - 100 கிராம், தக்காளி - 4, தேங்காய்த் துருவல் - 50 கிராம், பூண்டு - 6 பல், மிளகாய் - 2, சீரகம் - 5 கிராம், தயிர் - கால் லிட்டர், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: முதலில் அரைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, தக்காளியை மைபோல அரைக்க வேண்டும். பூண்டு, மிளகாய், சீரகத்தை நைசாக அரைத்து, அனைத்தையும் தயிரில் நன்கு கலக்க வேண்டும். இத்துடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, உப்பு சேர்த்துப் பயன்படுத்த வேண்டும்.
மருத்துவப் பயன்: ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். மலச்சிக்கல் சரியாகும். நினைவாற்றல் பெருகும். கொழுப்பைக் கரைத்து, பித்தத்தைத் தணிக்கும்.
பூசணி இட்லி
தேவையானவை: இட்லி மாவு - 2 கப், அரைத்த வெள்ளைப் பூசணி விழுது - 2 கப், உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: வெள்ளைப் பூசணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும். இட்லி மாவில் பூசணி விழுதைச் சேர்த்துக் கலக்கவும். கலக்கிய பின், வழக்கம் போல் இட்லி தட்டுக்களில் வார்த்து, வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.
மருத்துவப் பயன்: உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்திருக்கும் நீரை அகற்றும். பெண்களுக்கு ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.
முடக்கத்தான் - கம்பு தோசை
தேவையானவை: கம்பு - ஒரு கிலோ, வெந்தயம் - 50 கிராம், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 150 கிராம், பச்சை மிளகாய் - 5, முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: கம்புடன் வெந்தயத்தைச் சேர்த்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். அதனுடன் கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்து மாவாக அரைக்க வேண்டும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முடக்கத்தான் கீரையை மாவில் சேர்த்து, உப்பு கலந்து தோசையாக வார்க்க வேண்டும்
மருத்துவப் பயன்: கை கால் மூட்டுகள், இடுப்பு, கழுத்து, நரம்புகளில் ஏற்படும் வலி தீரும்.
உளுந்து சாதம்
தேவையானவை: நிறம் மாறாமல் வறுத்த சம்பா பச்சரிசி - அரை கிலோ, சீரகம், நெய் - சிறிதளவு, உளுந்து - 125 கிராம், தேங்காய்த் துருவல்- 2 மேசைக் கரண்டி, பூண்டு - 25 கிராம், பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி, தண்ணீர் - ஒரு லிட்டர், உப்பு, கறிவேப்பிலை - தேவைக்கேற்ப.
செய்முறை: தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவும். கொதித்ததும் அரிசி, உளுந்தை வேகவைக்கவும். பாதி வெந்ததும் தேங்காய்ப்பூ, உப்பு, பூண்டு, பெருங்காயம், சீரகம் சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்த பிறகு நெய், கறிவேப்பிலை போட்டு அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.
மருத்துவப் பயன்: கை கால் வலி, அசதி, எலும்பு பலவீனம் ஆகியவற்றைப் போக்கி சுறுசுறுப்பு தரும். மெல்லிய உடல்வாகு கொண்டவர்களுக்கு ஊட்டமான உணவு.