உடல்,மனம்,ஆன்ம அழுக்குகளை நீக்கும் முத்திரை !!!
மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப் பதிவுகளே பெரும்பாலான நாள்பட்ட நோய்களுக்கு மூல காரணமாக உள்ளன
"தூய்மைப்படுத்தும் முத்திரை' குறித்து காணலாம்.
முத்திரைகளின் செயல்பாடுகள்
நாம் பயன்படுத்தும் பெரும்பாலான தந்திர யோக முத்திரைகளும் மூன்று நிலைகளில் செயல்படுகின்றன.
✷ உடல் சார்ந்த நிலை
✷ மனம், எண்ணம் சார்ந்த நிலை
✷ ஆன்மிக நிலை
ஒரு முத்திரையைச் செய்யத் துவங்கும்போது முதலில் அதன் பலன்களை நமது பருவுடலில் மட்டுமே உணரமுடியும். இதையே உடல் சார்ந்த நிலை செயல்பாடு என்கிறோம்.
அதே முத்திரையை மேலும் பல வாரங்கள் அல்லது மாதங்கள் தொடர்ந்து செய்துவரும்போது, நமது எண்ணங்களிலும் உணர்வு நிலைகளிலும் பல மாற்றங்களை உணரமுடியும். இதையே மனம் சார்ந்த நிலை செயல்பாடுகள் என்கிறோம்.
அதே முத்திரையை மேலும் தொடர்ந்து செய்துவந்தால் சக்தி உடல்களில் பல மாற்றங்கள் நிகழத் துவங்கும். மனமும் எண்ணங்களும் இரண்டாவது நிலையில் பண்பட்ட பின்னரே மூன்றாவது நிலையான ஆன்மிக நிலை செயல்பாடுகளை உணரமுடியும். இதுவே மூன்றாவது நிலையான ஆன்மிக நிலை செயல்பாடு களாகும்.
"தூய்மைப்படுத்தும் முத்திரை' என்பது நமது பருவுடலில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுப் பொருட்களையும் அகற்றி, உடலைத் தூய்மைப்படுத்தும் ஒரு அற்புதமான முத்திரையாகும்.
இதே முத்திரையை நமது எண்ணங் களில் தேங்கி நிற்கும் கழிவுகளையும் நச்சுக்களையும் வெளியேற்றவும் பயன் படுத்த முடியும்.
மனமும் எண்ணங்களும் சீராகும் போது அவற்றோடு தொடர்புடைய மனோமய கோசமும் விஞ்ஞானமய கோசமும் சீராகும். மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப்பதிவுகள் அனைத்தும் அகன்றுபோகும்.
அவற்றால் உருவான நோய்களும் மறைந்து போகும்.
செய்முறை
✷ இரு கைகளின் விரல்களையும் அகல விரித்துக்கொள்ளுங்கள்.
✷ பெருவிரலை மடித்து, அதன் நுனிப் பகுதியால் மோதிர விரலின் கீழ்பகுதியில் உள்ள கோட்டைத் தொடவும்.
✷ அழுத்தம் வேண்டாம். சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும்.
✷ முழுக் கவனத்தையும் முத்திரையின்மீது பதியுங்கள்.
✷ கண்களை மூடிக்கொள்ளுங்கள்.
அமரும் முறை
✷ ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.
✷ ஆசனங்களில் பரிச்சயமில்லாதவர்கள் சாதாரணமாக கால்களை மடக்கி சம்மண மிட்டு அமர்ந்தும் செய்யலாம். (இதையே "சுகாசனம்' என்கிறோம்.)
✷ கால்களை மடக்கி தரையில் அமர முடியாதவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து செய்யவும். (உள்ளங்கால்கள் பூமியில் பதிந்திருக்கட்டும்).
✷ நாள்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள் கூட, படுத்த நிலையிலேயே இந்த முத்திரை யைச் செய்யலாம்.
✷ எந்த நிலையிலிருந்து செய்தாலும், கழுத்தும் முதுகும் வளைவின்றி நேராக இருப்பது அவசியம்.
சுவாசம்
✷ இயல்பான சுவாச நடை.
✷ சுவாசம் சற்றே ஆழமாகவும் சீராகவும் இருந்தால் போதும்.
✷ மூச்சை உள்ளே அடக்கும் "கும்பகம்' கூடாது.
எப்போது செய்வது?
✷ தூய்மைப்படுத்தும் முத்திரையைச் செய்வதற்கு ஏற்ற நேரம் காலை வேளைதான்.
✷ காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி, காலைக் கடன்களை முடித்துவிட்டு இந்த முத்திரையைச் செய்யத் துவங்குங்கள்.
✷ ஒரு கப் நீர் வேண்டுமானால் அருந்தி விட்டுச் செய்யலாம்.
✷ காலை எழுந்தவுடன் காபி அல்லது தேநீர் குடித்தால் 30 நிமிடங்களுக்கு பின்னர் முத்திரையைச் செய்யலாம்.
✷ வெறும் வயிற்றில் செய்வது நல்லது.
✷ அதிகாலையிலேயே எழுந்துவிடும் பழக்கம் உள்ளவர்கள் பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை நான்கு முதல் ஐந்து மணி வரையுள்ள நேரத்தில் முத்திரைகளைச் செய்தால் பலன்கள் மேலும் அதிகமாகும்.
எவ்வளவு நேரம்?
✷ தினமும் காலையில் 15 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும்
✷ பருவுடலில் தேங்கி நிற்கும் அழுக்குகளை அகற்ற தொடர்ந்து 15 நாட்கள் மட்டும் செய்தால் போதும்.
✷ மனோமய கோசத் தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப் பதிவுகளை அகற்ற குறைந்தபட்சமாக மூன்று மாதங்கள்- அதிகபட்சமாக ஆறு மாதங்கள் வரையிலும் தொடர்ந்து செய்யவேண்டும்.
பலன்கள்
தூய்மைப்படுத்தும் முத்திரையைத் தொடர்ந்து செய்துவரும்போது படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நிலை பலன் களையும் உணர முடியும். அவை ஒவ்வொன்றையும் தனித்தனியே காணலாம்.
1. பருவுடல் சார்ந்த பலன்கள்
இந்த முத்திரையைச் செய்யும்போது முதல் 15 நாட்களிலேயே பருவுடல் சார்ந்த பலன்கள் முழுமையாகக் கிட்டிவிடும்.
✷ உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் அனைத்தும் முழுமையாக வெளியேறும்.
✷ பல வருடங்களாக உடலினுள் தேங்கிக் கிடக்கும் நச்சுப் பொருட்களும் வெளியேறிவிடும்.
✷ உடல் தூய்மையடையும்.
✷ உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும்.
✷ அசதி, உடல் சோர்வு, மந்தத் தன்மை போன்றவை மறைந்து போகும்.
✷ உடல் லேசாகும்.
✷ கழிவுப் பொருட்களின் தேக்கத்தால் பருவுடலில் உருவான நோய்களின் தாக்கம் படிப்படியாகக் குறையும்.
இந்த முத்திரையைச் செய்யத் துவங்கும் போது முதல் மூன்று நாட்களில் எந்த மாற்றமும் தெரியாது. நான்காவது நாளிலிருந்து கழிவுப் பொருட்கள் சிறிது சிறிதாக உடலைவிட்டு வெளியேறத் துவங்கும். இவை எந்த வழியாக வெளியேறுகின்றன என்பதைப் பொறுத்து பல மாற்றங்களை உணரமுடியும்.
கழிவுப் பொருட்கள் மலம் வழியாக வெளியேறும்போது
✷ மலம் சற்றே இளகலாகப் போகக்கூடும்.
✷ மலத்தின் நிறம் மாறும். கரும்பச்சை அல்லது கறுப்பு நிறமாக இருக்கும்.
✷ சிலருக்கு சளி சளியாக மலத்தில் வெளியேறும்.
✷ வெளியேறும் மலத்தின் அளவும் வீச்சமும் அதிகமாக இருக்கும்.
✷ தேங்கி நிற்கும் நச்சுப் பொருட்களின் அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் சிலருக்கு சற்றே வயிற்றுப் போக்கு ஏற்படலாம். இது நல்லதே. இதை நிறுத்த மாத்திரைகள், மருந்துகள் எதுவும் எடுக்கக்கூடாது. நச்சுப் பொருட்கள் ஓரளவு வெளியேறிய பின்னர் இது தானாகவே நின்றுவிடும்.
சிறுநீர் வழியாக வெளியேறும்போது
✷ சிறுநீரின் அளவு அதிகமாகும்.
✷ அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய திருக்கலாம்.
✷ சிறுநீர் ஆழ்ந்த மஞ்சள் அல்லது பிரௌன் நிறமாக மாறலாம்.
✷ வீச்சமும் அதிகமிருக்கும்.
வியர்வை வழியாக வெளியேறும்போதுசிலருக்கு நச்சுப் பொருட்கள் வியர்வை வழியாகக்கூட வெளியே வரும். குறிப்பாக, நீண்ட நாட்களாக சர்க்கரை வியாதி, ரத்த அழுத்த நோய் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு இது அதிகமாக நிகழும்.
✷ வியர்வையின் அளவு அதிகமாகும்.
✷ சிலருக்கு வியர்வையினால் உடலில் உப்புப் பூத்ததுபோன்று தோன்றும்.
✷ வியர்வை நாற்றமும் அதிகமாகலாம்.
✷ இரவில்கூட சிலருக்கு அதிகமாக வியர்த் துக்கொட்டும்.
உமிழ்நீரில் வெளியேறும்போது
சில வகை நச்சுப் பொருட்கள் உமிழ்நீரின் வழியாகவும் வெளியேறக் கூடும். இவ்வாறு வெளியேறும்போது-
✷ உமிழ்நீரில் கசப்புத்தன்மை தோன்றலாம்.
✷ சிலருக்கு வாயில் உலோகச் சுவை தோன்றும்.
✷ உமிழ்நீரின் சுரப்பு அதிகமாகலாம்.
மூச்சுக்காற்றில் வெளியேறும்போது
சில நச்சுப் பொருட்கள் மூச்சுக் காற்றின் வழியாகவும் வெளியேறும்.
✷ மூச்சுக் காற்றில் ஒருவித துர்வாசனை, கந்தக நெடி போன்றவை தோன்றும்.
குறிப்பு
✷ நச்சுப் பொருட்கள் இவற்றில் ஏதேனும் ஒரு வழியில் அல்லது பல வழிகளில் உடலைவிட்டு வெளியேறும்.
✷ சிலருக்கு மலம், சிறுநீர், வியர்வை, உமிழ்நீர், மூச்சுக்காற்று ஆகிய அனைத் திலுமே மாற்றங்கள் ஏற்படலாம்.
✷ இந்த மாற்றங்கள் முத்திரையைத் துவங்கிய நான்காவது நாளிலிருந்து தோன்றத் துவங்கும். சுமார் ஏழு நாட்கள் வரையில் தொடரும்.
✷ முத்திரை துவங்கிய 11 அல்லது 12-ஆவது நாளில் இந்த மாற்றங்கள் அனைத்தும் தானாகவே நின்றுவிடும். அவ்வாறு நிற்கும்போது நச்சுப் பொருட்கள் அனைத்தும் உடலைவிட்டு வெளியேறிவிட்டன என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
✷ சிலருக்கு- குறிப்பாக போதைப் பொருட்களை அதிக அளவில் நீண்டகாலம் உபயோகிப்பவர்களுக்கும், பல வருடங்களாக மாத்திரை, மருந்துகளை தொடர்ந்து உபயோகித்து வருபவர்களுக்கும் உடலில் நச்சுப் பொருட்களின் தேக்கம் மிக அதிக அளவில் இருக்கலாம். இவர்களுக்கு மட்டும் நச்சுப் பொருட்கள் முழுமையாக வெளியேறி முடிய மேலும் சில நாட்கள் ஆகலாம்.
✷ நச்சுப் பொருட்கள் முழுமையாக வெளியேறிய பின்னர் மேலும் மூன்று அல்லது நான்கு நாட்கள் இந்த முத்திரையைச் செய்த பின்னர் நிறுத்திக் கொள்ளலாம். (உத்தேசமாக 15 நாட்கள்).
அடுத்த நிலை பலன்களும் வேண்டுமென் றால் தொடர்ந்து முத்திரையைச் செய்துவர வேண்டும்.
2. மனம் சார்ந்த பலன்கள்
✷ மனதிலுள்ள கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை எண்ணங்கள் அகலும்.
✷ நேர் சிந்தனைகள் மனதில் நிறையும்.
✷ மனம் படிப்படியாகப் பண்படும்.
இதே முத்திரையைத் தொடர்ந்து செய்து, மனம் பண்பட்ட நிலையில் மனோமய கோசத்தில் மாறுதல்கள் நிகழும்.
3. ஆன்மிக நிலை மாற்றங்கள்- பலன்கள்
✷ மனோமய கோசத்தில் தேங்கி நிற்கும் எதிர்மறை எண்ணப்பதிவுகள் படிப்படியாக மறைந்து போகும்.
✷ மனோமய கோசம் வலுவாகும்.
✷ சக்கரங்களிலும், நாடிகளிலும், கோசங் களிலும் உள்ள சக்தித் தடைகள் அகலும்.
✷ பந்த பாசங்கள் விலகும்.
✷ மாயையின் கட்டுகள் அவிழும்.
✷ ஆன்மா விடுதலை பெறும்.
குறிப்பு:
ஆன்மிக நிலை பலன்களைப் பெற இந்த முத்திரைப் பயிற்சியை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரையிலும் தொடர்ந்து செய்துவர வேண்டும்.