பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் - women-focus-on-bone-health

  பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில்  கவனம் வேண்டும் - women-focus-on-bone-health


அன்றாடம் சாப்பிடும் உணவு கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யாது. கால்சியம் நிறைந்த பொருட்களுடன் வைட்டமின் டி சத்து கொண்ட ஏதாவது ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பெண்கள் எலும்பு ஆரோக்கியத்தில் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?


எலும்பு சார்ந்த உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலையிலேயே அதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். உடலமைப்பை கட்டமைத்தல், உறுப்புகளை பாதுகாத்தல், தசைகளை வலுப்படுத்துதல், கால்சியத்தை சேமித்தல் என உடல் நலத்தில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தை பருவம் மற்றும் இளமைப் பருவத்தில் வலுவான, ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது முக்கியம்.

இருப்பினும் இளமை பருவத்தில் எலும்புகளை பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம். பெண்களை பொறுத்தவரை, 30 வயதுக்கு பிறகு எலும்பில் இருக்கும் கால்சியம் குறையத் தொடங்கும். உலக அளவில் இந்திய பெண்கள்தான் எலும்பு ஆரோக்கிய பிரச்சினையால் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள். குறிப்பாக மேற்கத்திய நாடுகளை சேர்ந்த பெண்களுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்களுக்கு எலும்பு எடை அல்லது எலும்பு வலிமை குறைவாக இருக்கிறது. சிறிய அல்லது மெல்லிய எலும்புகள் கொண்ட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் தொடர்பான எலும்பு எடை ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கிறது.

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் செயல்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறுகிறது. இந்த ஹார்மோன்தான் எலும்பு வளர்ச்சி மற்றும் வலிமைக்கு மிகவும் முக்கியமானது. அதேவேளையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையும்போது மெனோபாஸ் நெருங்கும். மேற்கத்திய பெண்களுடன் ஒப்பிடும்போது இந்திய பெண்கள் முன்கூட்டியே மெனோபாஸ் பாதிப்பை எதிர்கொள்கிறார்கள். இது விரைவாகவே எலும்பு வலிமை குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

பொதுவாகவே எலும்புகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கும் உணவுகளை இந்திய பெண்கள் குறைவாகவே உட்கொள்கிறார்கள். ஆண்களுடன் ஒப்பிடும்போது,​கால்சியம் நிறைந்த உணவுகளான பால் மற்றும் தயிர் போன்றவற்றை பெண்கள் உட்கொள்ளும் அளவு குறைவு. அதுபோல் இறைச்சி, மீன் மற்றும் முட்டை போன்றவற்றை தவிர்ப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்திய பெண் களிடையே எலும்பு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லை என்பதையே ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன. உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கம், கால்சியம், வைட்டமின் டி கொண்ட உணவுகளை உட்கொள்ளுதல், மது, புகை பழக்கத்தை தவிர்த்தல் போன்றவை எலும்பு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை தடுக்க அல்லது குறைக்க உதவும்.

அன்றாடம் சாப்பிடும் உணவு கால்சியம் தேவைகளை பூர்த்தி செய்யாது. கால்சியம் நிறைந்த பொருட்களுடன் வைட்டமின் டி சத்து கொண்ட ஏதாவது ஒரு பொருளை சேர்த்துக்கொள்ளுங்கள்.

உடலில் கால்சியம் சத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு மருத்துவர்கள் கால்சியம் மாத்திரைகளை பரிந்துரைப்பதுண்டு. அவற்றை விழுங்குவதற்கு சிரமமாக இருப்பதாக சிலர் புகார் கூறுகிறார்கள். தற்போது மென்று சாப்பிடக் கூடிய வகையில் மாத்திரைகள் வந்திருக்கின்றன. அவற்றை சுவைப்பதற்கும் நன்றாக இருக்கும். அதனால் சிரமப்பட தேவையில்லை. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதனை சாப்பிடக்கூடாது.

Women Health | பெண்கள் உடல்நலம்