பரிசு - குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?

பரிசு - குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும்?



''பரிசு... பொருளாக, வார்த்தையாக, சிறிது நேரம் உடன் செலவிடுவதாக என எதுவாகவும் இருக்கலாம். இத்தகைய பரிசுகள் அனைவரையும் உற்சாகப்படுத்தும். குழந்தைகளையோ மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டுசெல்லும்'' என்கிறார், குழந்தைகள் நல ஆர்வலர் பிரீத்தா நிலா. பெற்றோர் கொடுக்கும் பரிசு, குழந்தைகளுக்குள் எத்தகைய மாற்றங்களை உண்டாக்கும் என்பதையும் விளக்குகிறார்.

''பரிசு என்றாலே, குழந்தைகள் முகம் புன்னகையில் மலரும். சந்தோஷத்தில் அவர்கள் உள்ளம் தவழும். பரிசுகள் குழந்தைகளை மேலும் உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்தும். கடையில் வாங்கிக்கொடுப்பதைத் தாண்டி, அதிக பொருட்செலவு இல்லாமல், பெற்றோர்கள் தங்கள் கைகளால் செய்துக்கொடுக்கும் பரிசுகளைக் குழந்தைகள் அதிகம் விரும்புவார்கள். அது, காகிதத்தில் வரைந்த ஓவியம், களிமண்ணால் செய்த சிறு பொம்மை, அட்டைப்பெட்டியில் செய்த வீடு என எதுவாகவும் இருக்கலாம். சிறு உண்டியல் கொடுத்து சேமிக்கக் கற்றுக்கொடுப்பது, வண்ணப் பென்சில்கள், அழிப்பான் வாங்கிக் கொடுப்பது, குழந்தைக்குப் பிடித்த துறை சார்ந்த முன்னேற்றத்துக்கு உதவும் பொருளாக என இருக்கலாம். இவற்றை கொடுக்க அதிக பொருட்செலவோ, நேரமோ தேவையில்லை.

பெற்றோர் கொடுக்கும் பரிசுப் பொருட்களின் விலையை மதிப்பீடு செய்யும் பழக்கம் குழந்தைகளுக்கு இருக்காது. அன்பையும் பாசத்தையும் மட்டுமே பார்ப்பார்கள். அதனால், என்ன பரிசு, எவ்வளவு விலையுள்ள பரிசு கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. ஆனால், அந்தப் பரிசு அவர்களின் வளர்ச்சிக்கு சிறிய பங்கை ஆற்றும் வகையில் இருக்க வேண்டும். அன்பான ஒரு கைகுலுக்கல், கட்டியணைத்தல், முத்தமிடுதல், சிறிது நேரம் குழந்தைகளோடு செலவிடுவது ஆகியவையும் உயர்ந்த பரிசுகளே. இதனால், சிறு தாவரங்கள், செடிகள், பறவைகள் போன்ற உயிர்ப்புள்ள செயல்பாடுகள் மீது குழந்தைகள் அளவற்ற அன்பைச் செலுத்துவார்கள்.

தன் வளர்ப்பால் செடியில் ஒரு பூ மலர்வது, குருவி முட்டையிட்டு குஞ்சுப் பொறிப்பதைப் பார்ப்பதும் அர்த்தமுள்ள செயல்பாடுகளைச் செய்ய குழந்தைகளைத் தூண்டும். தன் பொழுதுபோக்கும்கூட பயனுள்ள விதத்தில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையைத் தூண்டும். குழந்தைக்கு வாசிக்கும் பழக்கம் பிடிக்கும் என்றால், அவர்களை நல்வழிப்படுத்தும் புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். வாசிப்பு பழக்கமே இல்லாத குழந்தைகளுக்கும் புத்தகங்களைப் பரிசாக கொடுத்து வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கலாம். சகோதர, சகோதரிகள் அல்லது வீட்டுக்கு அருகில் உள்ள நண்பர்களுடன் இணைந்து ஆளுக்கு ஒரு புத்தகம் படித்து, தான் படித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பழக்கப்படுத்தலாம். இவையெல்லாம் கூட்டுமனப்பான்மையை வளர்க்கும். ஒருவர் கற்ற அறிவு, மற்றவர்களிடம் பரவ வழிசெய்யும்.

பரிசுப் பொருள்கள் குழந்தைகளை வளர்ச்சிப்படுத்தும். அதேசமயம் அந்தப் பரிசு வெற்றிக்கு மட்டுமே கொடுப்பது, குழந்தைகளால் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் செய்யவும் வழிவகுக்கலாம். அதனால், வெற்றிக்கு ஆடம்பர பரிசும் ஆர்ப்பாட்டங்களும் வேண்டாம். தோல்விக்கு ஊக்கமில்லா அமைதியான நிசப்தமும் வேண்டாம். காரணம் பார்த்து குழந்தைகளுக்குப் பரிசுக் கொடுப்பதைத் தவிர்த்து, அடிக்கடி பரிசுக் கொடுக்கலாம். அந்தப் பரிசு குழந்தைகளின் வெற்றி, தோல்வி இரண்டிலுமே சமநிலையில் இருக்க வேண்டும். இதுபோன்ற பரிசுதான் பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாது; மகிழ்ச்சியையும் குறைக்காது. இதனால், குழந்தைப் பருவத்தை அவர்களால் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் கழிக்க முடியும்'' என்கிறார் பிரீத்தா நிலா.

மற்ற குழந்தைகளுடன் தன்னையும், தனக்குக் கிடைக்கும் பரிசுப் பொருள்களையும் ஒப்பீடு செய்து பார்க்காத வகையில் குழந்தையின் மீது அன்பு செலுத்த வேண்டியது பெற்றோர் கடமை. பரிசு வாங்கி மகிழ்ச்சி அடைவது போலவே, 'வெற்றிபெற்ற, சோர்வடைந்த நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பரிசுக் கொடுக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடம் ஏற்படுத்தினால், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.